மோடி பஜனை!
அதிகாலை
வேளையில் மோடி பஜனை பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை
உற்றுப்பாருங்கள். ஒரு வேளை அவர்கள் வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும்.
திருமண தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று
விடுவார்கள். தமிழருவியொ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல
பாஜகவுக்கு சேவை செய்து வருகிறார்.
கருவாட்டுப் பானையை சுற்றி
வரும் கபட பூனையைப் போல தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார் நரேந்திர மோடி.
ஏற்கனவே திருச்சிக்கு வந்து கூட்டிவரப்பட்ட கூட்டத்தில் முழங்கிவிட்டுப்
போனார்.
வேதாரண்யத்திற்கு வ.உ.சி. உப்பு காய்ச்சப்போனார் என்பன
உள்ளிட்ட தவறான தகவல்களை கூறி பலருக்கும் பீதியூட்டினார். பின்பு அருண்ஷோரி
எழுதிய புத்தகத்தை வெளியிடுவதற்காக சென்னை வந்தார். இப்போது மீண்டும்
சென்னை வர இருக்கிறாராம். அவரை வரவேற்க வரவேற்புக்குழு ஒன்றை “புரட்சி
புயல்” வைகோ அமைத்துள்ளாராம்.
பாஜக கூட இப்படியொரு
வரவேற்புக்குழுவை அமைத்ததாக தகவல் இல்லை. ஆனால் இன்னமும் எத்தனை இடம் என்று
கூட முடிவாகாத நிலையில் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படும் வைகோ
வரவேற்புக் குழுவை அமைத்திருக்கிறார். விட்டால் இவரே கூட அன்றைக்கு புலி
வேசம் போட்டு ஆடுவார் போலிருக்கிறது. பாஜக விரித்த வலையில் தமிழகத்தை
பொறுத்தவரையில் மதிமுகவை தவிர வேறு எந்தக்கட்சியும் இதுவரை சிக்கவில்லை.
தாயகத்தில் ஒருமுறை, கமலாலயத்தில் ஒருமுறை என்று இரண்டு முறை
பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கிறது. எனினும் முடிவு எதுவும்
எட்டப்படவில்லை. இந்த பேச்சுவார்த்தைகளில் காந்திய மக்கள் இயக்க தலைவர்
என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தமிழருவி மணியனும் பங்கேற்றாராம், திருமண
தரகு வேலை பார்ப்பவர்கள் கூட ஜாதக பரிமாற்றத்தோடு நின்று விடுவார்கள்.
ஆனால் இவரோ கல்யாண வீட்டில் இலை எடுப்பது வரை இருப்பது போல பாஜகவுக்கு
சேவை செய்து வருகிறார். அந்தளவுக்கு காந்தியின்மீது `பாசம்’ பொங்கி
வழிகிறது. நான் சென்னையில் கூட்டிய கூட்டத்தில்தான் சேது சமுத்திரத்
திட்டத்தை நிறைவேற்ற வாஜ்பாய் உறுதியளித்தார்.
என்னைத் தவிர இந்த
திட்டத்திற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என்று முழங்குவார் வைகோ.
ஆனால் பாஜக பக்கம் இவருடைய பாசப்பார்வை திரும்பியவுடனேயே சேது சமுத்திரத்
திட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனை இருப்பதாக பேசத் துவங்கிவிட்டார்.
இப்போதுதான் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளும் பாசிகளும் இருப்பது இவருக்கு
தெரியவந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக மூழ்கினால் ராமர் கட்டிய
பாலமும் கூட அவருக்கு தெரியக்கூடும். அண்மைக் காலமாக மோடியை நினைக்கும்
பொழுதெல்லாம் வைகோவுக்கு, ஆவேசம் அதிகமாகி வியர்த்துக் கொட்டத் துவங்கி
விடுகிறது.
நாடெங்கும் மோடி அலை, வீடெங்கும் மோடி அலை,
டீக்கடைகள், காடுகள், கழனிகள், எங்கெங்கும் மோடி அலை வீசுகிறது என்று
புல்லரித்து, போர்வையை எடுத்து போர்த்திக்கொள்கிறார். தேர்தல் வர இன்னும்
சில மாதங்கள் உள்ளன. அதற்குள் இவ்வளவு புல்லரிப்பு என்றால் இன்னும்
போகப்போக என்னாகுமோ தெரியவில்லை. டீக்கடை பாய்லரில் அடிக்கும் ஆவி கூட
இவருக்கு மோடி அலையாகத் தெரிகிறது.
பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா
என்பவர் தந்தை பெரியாரை மிகமிக இழிவாகப் பேசியிருக்கிறார். பெரியார் வழி
வந்ததாக கூறிக்கொள்ளும் வைகோ இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தை கூட
பேசவில்லை. உலகத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதற்காக கண்டனம்
முழங்கும் வைகோ பெரியாரை பழித்ததை, இழித்துரைத்ததை கண்டு கொள்ளாமல்
இருப்பது ஏனோ? நாகரிகமான அரசியலுக்காகவே பாஜகவுக்கு பல்லக்கு தூக்குவதாக
கூறிக்கொள்ளும் தமிழருவியும் இதை கண்டு கொள்ளவில்லை.
இப்போதைக்கு
இவர்களுக்கு பெரியாரால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதிகாலை வேளையில் மோடி பஜனை
பாடிக்கொண்டு யாராவது வந்தால் அவர்களை உற்றுப்பாருங்கள். ஒரு வேளை அவர்கள்
வைகோ, தமிழருவியாக கூட இருக்கக்கூடும்.
-மதுரை சொக்கன்
#நன்றி:தீக்கதிர், 29-1-2014
No comments:
Post a Comment