தென்றல் (Thendral)

Saturday, June 13, 2015

நம் ஆட்கள் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால்?-பெரியார்

நம் ஆட்கள் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால்?-பெரியார்

முற்காலச் ஜாதிக் கொடுமைகளை இக்கால இளைஞர் எப்படி அறிவர்?

என்னுடைய கழகத் தோழர்கள் பலர் பல மாதங்கள் தண்டிக்கப்பட்டு பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் ஆளாகி வெளியே வந்திருக்கிறார்கள். இன்னும் பலர் ஒன்றரையாண்டு, 2-ஆண்டு தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பத்துப்பேருக்கு மேல் சிறையில் சாகடிக்கப்பட்டுமிருக்கிறார்கள். இன்னும் பலர் சாக இருக்கிறார்கள்! இதற்குப் பெரும்பாலன காரணம் சிறையிலே இருக்கிற டாக்டர்கள் அல்லது கல் மன மனிதர்கள். டாக்டர்களுடைய அன்பான நடத்தையாலேயே உலகத்தில் அரைவாசி நோய் போய்விடும். ஆனால் ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போனால் அங்கிருக்கிற டாக்டர் பார்த்தாலே நோய் தானாக வருகிறது!

இந்தத் திருச்சியிலே சர்க்கார் (அரசு) ஆஸ்பத்திரியிலே (மருத்துவமனையிலே) இருக்கிற (மாவட்ட மருத்துவ அதிகாரியிடம்) டி.எம்.ஓ.விடம் நோய் என்று சொல்லி எங்களுடைய ஆள்கள் போனால் மிகவும் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் திட்டி இழிவு படுத்துகிறாராம்.... அவர் ஜாதிமுறைப்படி ஓர் ஆதிதிராவிடர் பறையன், பஞ்சமன் என்று சொல்லப்படும் கீழ்ஜாதியைச் சார்ந்த ஒருவர். இவர்களுக்கெல்லாம் என்ன பிறக்கும்போதே யோக்கியதை, அந்தஸ்து (தகுதி) வந்துவிட்டதா? யாராலே வந்தது இந்த யோக்கியதை என்று எண்ணிப்பார்க்க வேண்டாமா? இந்த சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதானே பறையன், சக்கிலி, பஞ்சமன் என்பவையெல்லாம் மாறிக்கொண்டு வருகின்றன. யாராவது மறுக்கட்டுமே பார்க்கலாம். இதுமாதிரி ஆள்கள் எல்லாம் டி.எம்.ஓ.வாக வருவதற்கு யார் முயற்சி பண்ணினது? சொல்லட்டுமே பார்ப்போம்! ஜஸ்டிஸ் கட்சி என்று இந்தத் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னால் எந்தப் பறையன், எந்தச் சக்கிலி, எந்தப் பஞ்சமன் இங்கு டி.எம்.ஓ.வாக (மாவட்ட மருத்துவ அதிகாரியாக) வந்திருக்கிறான்? எடுத்துக்காட்டினால் ஏற்றுக்கொள்கிறேன்.

நீங்கள் பிறவியில் இழிந்தவர்; ஜாதியால் கீழ்ஜாதி; உங்கள் பிறவி இழிவை ஒழிக்கப் பாடுபடுகிறோம். அதற்கு ஆக ஜெயிலுக்கு (சிறைக்கு) வந்தோம்; நீங்கள் பிறக்கும்போது உமக்கிருந்த யோக்கியதை என்ன? இந்த நாட்டிலேயே பிறக்கும் போதே பிறவியினால் யோக்கியதை ஒருவனுக்கு உண்டு என்றால் அது பார்ப்பானுக்குத்தானே யொழிய யாருக்கும் இல்லை. இதை நினைக்க வேண்டாமா?

அப்படியேதான் உனக்கு என்று ஒரு அந்தஸ்து (தகுதி) அரசாங்கத்தின் மூலம் ஏற்பட்டது என்று சொன்னாலும் யார் நீ? எங்களுடைய (public Servant) வேலைக்காரன்தானே? மேலே இந்த நாட்டுக்கே பிரதம மந்திரியாக இருக்கிற நேரு சொல்லுகிறார் "நான் மக்களுடைய வேலைக்காரன்" என்று. அப்புறம் நீ யார்? எம்மாத்திரம்?

எனக்கு யாரோ சொன்னார்கள் "இந்த ஆசாமி அப்படி நடப்பதற்குக் காரணம் ஒரு பார்ப்பனத்தியைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதனாலேயே தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு தான் தோன்றித்தனமாக நடந்து வருகிறார் என்று.

நம் ஆட்கள் சிலர் பார்ப்பனத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் அவள் நம் ஜாதியாக ஆவதற்குப்பதிலாக இவன் பார்ப்பானாகிவிடுகிறான்! பார்ப்பான் மாதிரியே பேசுகிறான். நடை, உடை, பாவனைகள், பேச்சு, உணர்ச்சி எல்லாவற்றையும் மாற்றிக் கொள்கிறான். அவர் அப்படிப்பட்ட ஆள்களில் ஒருவராக இருப்பதால்தானோ என்னவோ தம்முடைய ஆட்களை மனிதர்களாகவே மதித்து நடப்பதில்லை. இதற்கு ஏதாவது வழி பிறக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பல பேர்கள் சாகப்போவது உறுதிதான். இது போன்றவர்கள் தாங்கள் செய்யும் தொழிலுக்கு எப்படி பொருத்தமானவர்கள் ஆவார்கள்?"

ஆகவே எங்களைப் பாராட்டுவதைவிட ஜெயிலில் செத்துப் போனார்களே அவர்களைப் பாராட்டுவதும் சாக இருப்பவர்களைப் பாராட்டுவதும் தான் முக்கியமானதாகும்.

என்னைப் பொறுத்தவரையில் சிறையில் நான் எந்தவிதக் கஷ்டமும்படவில்லை. மிகவும் சௌக்கியமாக இருந்தேன். ஆரம்பத்தில் சில நாட்கள் தவிர மீதி நாட்கள் பூராவும் ஆஸ்பத்திரியில் வைத்து என்னை மிகவும் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டார்கள். ஒரு ஓட்டைக்காரை ஓவர் ஆல் (பழுது பார்த்து) பண்ணி சர்வீசுக்கு (முழுத்தொண்டுக்கு) இலாயக்கானதாக ஆக்கி அனுப்பி வைப்பது போல் என்னை இளையவனாக அனுப்பி வைத்தார்கள். கிழடு தட்டிப்போன என்னை வயசு வந்தவனாக ஆக்கி அனுப்பியிருக்கிறார்கள். எல்லோரும் சர்க்காரைத் (அரசை) திட்டுவார்கள். நான் பாராட்டுகிறேன். எல்லோரும் நினைத்தார்கள் சரி இவர்களும் ஒழிந்தார்கள் என்று; ஆனால் ஏமாந்து போனார்கள். நம் தமிழர் ஆட்களுக்கு இன உணர்ச்சியே கிடையாது.

ஆனால் இன்றைக்கு நம் நாட்டிலே ஆட்சி பீடத்தில் உள்ள முதல் அமைச்சர் காமராசர்தான் தமிழன் என்று நினைப்பவர். மற்றவர்களுக்கு இந்த எண்ணமே கிடையாது. ஏன்? இவரிடத்தில் இருக்கும் மற்ற எல்லா மந்திரிகளுக்கும் இந்த எண்ணம் இருக்கிறது என்று சொல்லும்படி நடந்துகொள்ளத் துணிவில்லை என்றாலும் கிழவன் போயிட்டா அப்பறம் நமக்கு யாரும் இல்லை. மற்றவர்கள் யார் இதைச் சொல்லுவார்கள் என்பது தெரியும். ஆகவே இன்னும் பல ஆண்டுகளுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மிகவும் கவலையோடு என்னைக் கவனித்தார்கள். அதற்காக நீங்கள் இந்த மந்திரிகளைப் பாராட்ட வேண்டும்.

நான் ஒன்றரை ஆண்டு தண்டனைபெற்று 6-மாதம் ஜெயிலுக்கு போனதால் ஒன்றும் கெட்டுவிடவில்லை. நான் இருக்கும் போது எப்படியோ அதைவிட அதிகப் பிரசாரம் நடந்தது. நாம் ஒழிந்ததாக நினைத்த பல பேரும் ஏமாந்துபோனார்கள். 10-பேர் செத்தார்கள் என்பது இருந்தாலும், சும்மா சாகிறது ஒரு நல்ல காரியத்திற்குத் தங்கள் உயிரைக் கொடுத்தார்கள் என்ற புகழோடு பெருமையோடு செத்தார்கள். செத்தும் சாகாத மாதிரி செத்தார்கள். பொது வாழ்விலே இருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட சாவு வரவேண்டுமோ அப்படியான சாவு அவர்களுக்கு வந்தது!

இந்த இயக்கத்திலே இருக்கிற 100-க்கு 90-பேர் சொந்த வீட்டுச் சோற்றைத் தின்றுவிட்டுத் தங்கள் கைக் காசைச் செலவு செய்து கொண்டு கஷ்டங்களை ஏற்றுக்கொண்டு பாடுபடுவார்கள். இயக்கத்தால் பலன் காணுபவர்கள் பெரும்பாலும் கிடையாது.

இதனால் ஏற்பட்ட பலன், செய்திருக்கிற தியாகத்தைவிட அதிகமாகும். ஏராளமான உணர்ச்சிகளைக் கிளப்பிவிட்டது. நம் கொள்கைக்கு இலட்சியங்களுக்கு எதிரிகளே இல்லாத அளவுக்கு ஆக்கிவிட்டுவிட்டது. எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரில் இதுவரை பார்க்காத அளவு பிரசாரம். இதைவிட பெரிய கிளர்ச்சி நடைபெறுவதற்கு இக்கிளர்ச்சி வழிவகுக்கிறது. பொதுமக்களுக்கு நல்ல அளவு உணர்ச்சியை ஊட்டியுள்ளது நமது கிளர்ச்சி. நாமும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். எனவேதான் இதை ஒரு வழியனுப்புக் கிளர்ச்சி என்று சொன்னேன். ஆகவே இதில் தாய்மார்கள் ஏராளமாகப் பங்கு பெறவேண்டும் குடும்பம் குடும்பமாக நாம் ஜெயிலுக்குப் போக வேண்டும்.

ஜாதி இழிவு என்பது கொடுமையானது என்பது யாருக்குத் தெரியாது? அதற்கு இனிச் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதும், அதற்காகக் காரியத்தில் செய்யவேண்டியவைகள் என்ன என்று தயார் செய்து கொள்ள வேண்டியதுதான் நமது வேலை. சர்க்காரும் (அரசு) இரண்டில் ஒன்று பார்த்து ஆகவேண்டும். இதில் சுமார் 50,000- பேர்களுக்குக் குறையாமல் சிறைக்குப் போக வேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் படத்தைக் கொளுத்த வேண்டும். தயாராகப் போக வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் நாம் ஜெயிலுக்குப் போனபோது சாகவில்லையே என்ற கவலையே தவிர மற்றபடி இது வியாபாரம் மாதிரி எனக்குக் கிடையாது. மற்ற என்னுடைய கழகத் தோழர்களும் அப்படிப்பட்டவர்கள் தானே தவிர வேறில்லை.

எனக்கு இப்போது 80-வயது ஆகிறது 15, 20, 30-வயதிலே இருந்த ஜாதி ஆதிக்கம் இப்போது இருக்கிற இளைஞர்களுக்குத் தெரிய முடியாது. இப்போது அவையெல்லாம் ஒரு வேடிக்கையாகக் கூடத் தோன்றலாம்.

என்னுடைய இளம் வயதிலேயே ஜாதி ஒழிப்பு உணர்ச்சி எனக்கு எப்படியோ தோன்றிவிட்டது. என் சரித்திரம் 'தமிழர் தலைவர்' என்று விற்கப் படுகிறதே அதைப் பார்த்தால் தெரியும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே "கீழ் ஜாதிக்காரர்கள் வீட்டில் - வாணியர் என்று அழைக்கப்படுபவர்கள் வீட்டில் - தண்ணீர் குடிக்காதே; வாத்தியார் வீட்டில் குடி" என்று சொல்லித்தான் தினம் தினம் எங்க அம்மா என்னைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். நான் அங்குக் குடிக்காமல் கீழ்ஜாதி எனப்படுவோரின் வீட்டிலேயே தண்ணீர் குடித்துவிட்டுப் பொய் சொல்லிவிடுவேன். பிறகு இந்தச் சேதி எப்படியோ வீட்டிற்குத் தெரிந்து அதற்காகவே நீ படிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.

அந்தக் காலத்தில் இருக்கிற கொடுமை இன்றைக்கு யாருக்குத் தெரியும்? இன்றைய தினம் பெரிய மாறுதல் பரியாரி என்று சொன்னால் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டவர்கள். வண்ணானைவிட மிகவும் கேவலமாக நடத்தப்பட்டவர்கள். அவர்கள் பறையன், சக்கிலி ஜாதியாக இருந்தவர்கள். எவ்வளவோ மாறிவிட்டு இருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஜாதியைக் காப்பாற்றுவதுதான் ஒரு பொதுத் தொண்டு. அது இன்று நிலைமை தலை கீழாக மாறி இருக்கிறது!

இன்றைக்கு முதல் மந்திரியாக இருப்பவர் கீழான ஜாதி என்பதிலிருந்தே வந்திருக்கிறார்கள். அந்தச் ஜாதி நாடார் ஜாதி. அது மிகவும் கீழான ஜாதி என்று கருதப்பட்டதாகும். அதாவது வண்ணான், பரிபாரி முதல்கொண்டு தெருவில் போகலாம். நாடார் ஜாதிக்காரர்கள் போகக்கூடாது என்று சில இடத்தில் வைத்திருந்தார்கள். கோவிலுக்குள்கூட பரிபாரியையும், வண்ணாரையும் உள்ளே விடுவான். நாடாரை உள்ளேவிட மாட்டான். இந்த இயக்கம் இல்லாவிட்டால் அவர்கள் காலில் செருப்புக் கூடப்போட்டு அக்கிரகாரத்தில் போக முடியாது. அந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தவர்களாதலால் காமராசருக்கு ஒரளவு இவற்றையெல்லாம் உணர்ந்து நடந்து கொள்ள முடிகிறது. நம் இன மக்களுக்கு இன்றைய ஆட்சியிலே இவ்வளவு வசதிகள் செய்ய வேறு யாராலும் முடியாது. அவர் பல அருமையான காரியங்களைச் செய்து வருகிறார்.

------------------------------------- 14.11.1958-மணச்சநல்லூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: ”விடுதலை”, 26.11.1958

No comments:

Post a Comment

ThirukKuRaL