தென்றல் (Thendral)

Friday, June 5, 2015

Who is செல்லாத்தா ?

Who is செல்லாத்தா ?

என்னுடைய மனம் புண்பட்டது, அதனால் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன், கட்டுரையைப் படிக்கும் பலரில் சிலரது மனமும் புண்படலாம், அப்படி புண்பட்டால் ? முதல் வரியை படிக்கவும். 
தமிழன் இந்து தேசிய நீரோட்டத்தில் கரைந்து போகும் விதமாக பிள்ளையார் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடிவருகிறான். பகுத்தறிவாளர்கள் பிள்ளையார் தோன்றிய 'அழுக்கு' கதைகளை எடுத்துச் சொன்னாலும் வழிபாடுகள் புறக்கணிக்கப்படுவதில்லை மாறாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்தே வருகின்றன. 'மதம்' என்ற சொல்லும் யானைக்கும் தொடர்பிருப்பதால் தானோ, யானை முக பிள்ளையார் வழிபாடு எழுதப்படாத மதவெறி விழாகவாக பல இடங்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தமிழர்களுக்கென்றே தனிப் பெருமையும் குலவழிபாட்டு அம்மன் தெய்வங்களுக்கும், தொன்று தொட்ட மாயோன் சேயோன், சிவ வழிபாடுகளும் இருக்கும் பொழுது, பொது தெய்வம் என்ற கட்டமைப்பில் ஆரியமயமாக்கப்பட்ட / வேத தெய்வமாகக் காட்டப்பட்ட வடிவங்களை மட்டுமே வணங்குவது வளர்ந்த நாகரீகப் பண்பாடுகள் போல் கிராம தெய்வமான முனீஸ்வரனுக்கும் பூணூல் அணிவித்து சைவ படயலிட்டு வணங்கி வருகின்றனர்.
ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழகத்தில் பரவலாக கட்டப்பட்ட 108 வைணவ ஆலயங்களும், 108 சிவாலயங்களும், அவற்றிற்கான பஞ்சமி நிலங்களும் படிப்பு வழி வேலை அல்லது நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாத காலங்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வயிற்றுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவை. இவற்றில் முருகனின் அறுபடை வீடுகளும் அடக்கம்,  19 ஆம் நூற்றாண்டு துவக்கம் வரை அஹ்ரகாரங்களில் பஞ்சம் பசி பட்டினி என்பதே கிடையாது. தாது வருட பஞ்சத்தில் மாண்டோர் எல்லாம் அஹ்ரகாரம் சாராதோர்களே.
தமிழர்கள் வஞ்சப் புகழ்ச்சி அணியை இலக்கணத்தில் படித்திருந்தாலும், அது மிகவும் நுட்பமாக கட்டப்பட்டு திணிக்கப்படும் பொழுது அறியாமையால் அவற்றை உண்மை என்றும், தாம் தாழ்த்தப்படுகிறோம் என்கிற அறியாமையால் அவற்றையும் போற்றுகின்றனர், உதாரணத்திற்கு தமிழர் பழம் பெரும் தெய்வமான முருகனுக்கு அறிவு குறைவு என்பதால் அம்மையப்பன் தான் உலகம் என்று உணராது புற உலகை சுற்றிவிட்டான், ஞானப் பழம் பெரும் தகுதியற்றவன் என்கிற கதையை 'சிவபெருமானின் திருவிளையாடல்' கதை என்று சிலாகிக்கின்றனர். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டு வணங்கப்பெரும் முருகனை பொது ஆண்டு (கிபி) யில் அறிமுகப்படுத்த பிள்ளையாருக்கு தம்பி என்றாலும் ஏற்கின்றனர். அது எப்படி முன்னடி அறியப்பட்டவனுக்கு பின்னால் வந்தவன் தம்பியாவான் ? வட இந்தியாவில் கந்தன் என்று சொல்லப்படுவன் பிள்ளையாருக்கு அண்ணன், அங்கு பிள்ளையாரும் இருமனைவிகளுடன் திருமணமானவர், தமிழர்களுக்காகவே முருகன் பிள்ளையாருக்கு தம்பி என்றும் பிள்ளையார் மணமாகதவர் (பேச்சிலர்) என்று சொல்லப்படுகிறது. நம்ம தமிழக வழக்கத்தில் அண்ணனை விட்டு அல்லது முன்பே தம்பி திருமணம் செய்து கொள்வானா ? 
தவிர நமக்கெல்லாம் நன்கு தெரியும் குறிஞ்சி நிலம் சார்ந்ததே முருக வழிபாடு, குறிஞ்சி, குற்றால குறவஞ்சி ஆகியவை முருகனோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவை, இயல்பிலேயே குறவஞ்சி வள்ளி தான் முருகனின் ஒரே மனைவியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் வேதக் (கட்டுக்) கதைகளில் தேவேந்திரனின் மகள் தேவயானி தான் முதல் மனைவி என்றும் தாழ்ந்த குலத்து வள்ளி இரண்டாம் மனைவி என்று சொல்லப்படுகிறது.
அடிப்படை அல்லது பண்பாட்டுக் கூறுகள் எதையும் ஆராயும் சிந்தனை எதுவுமின்றி, தமிழர் குறித்து தமிழர்களுக்கு சொல்லப்படும் தமிழர்கள் அல்லாதோரின் கதைகளை அப்படியே தமிழர்கள் நம்புவது வேறெந்த இனத்தினரும், மொழியினரும் செய்யாத ஒரு மூடத்தனம் என்று கூறுவதைத் தவிர்த்து வெறென்ன சொல்வது ?

தமிழ்நிலத்தில் பன்னெடுங்காலமாக மாரியம்மன் வழிபாடு, கோடைக்கு பிறகு மழைவேண்டி, அறுவடை இல்லாத ஓய்வுகாலமான கோடைகாலத்தில் கொண்டாடப்படுகிறது, மாரி என்றால் மழை.
பின்னர் வேதவழி தெய்வம் என்று கூற புனையப்பட்ட மாரியம்மன் கதையும், பிள்ளையார் கதையும் எடுத்துக் கொண்டால் கிட்டதட்ட இரண்டும் ஒன்று போன்றதே, பரசு இராமன் தந்தை சிவனின் ஆணையை நிறைவேற்ற தன் தாய் பார்வதியின் கழுத்தை வெட்டுவான், பின்பு தவறை உணர்ந்து அவ்வழியாக செல்லும் தாழ்ந்த குலப் பெண்ணின் தலையை ஒட்டிப் முண்டத்தை பார்வதியின் உடலில் பொருத்துவார்கள், இது தான் மாரியம்மன் வழிபாட்டிற்கு சொல்லப்படும் ஆரிய வழிக்கதை. மாறாக குளிக்கச் செல்லும் முன் காவலுக்காக பார்வதி தன் அழுக்கினால் செய்யப்பட்ட பிள்ளையார் (மனித) உருவத்தை, மாற்றோன் என்று ஐயம் கொண்டு பிள்ளையார் தலையை வெட்டி, பின்னர் தவற்றை உணர்ந்த சிவன், அந்த பக்கமாக சென்ற குட்டியானையின் தலையை வெட்டி பொறுத்தப்பட்டதால் தான் பிள்ளையாருக்கு யானைத் தலையாம்.
மாரியம்மன் கதையை உண்மை என்றே நம்பி இன்றும் தமிழகத்தில் பல பல மாரியம்மன் கோவில்களில் பார்வதியின் தலையை மட்டும் சிலையாக வைத்து வைத்து வணங்குகிறார்கள், தாழ்ந்த குலப் பெண்ணில் உடலை வணங்கக் கூடாதாம். ஆனால் பிள்ளையாருக்கு அவ்வெறெல்லாம் அவமரியாதை இல்லை, ஏனெனில் யானை என்னும் விலங்கு தலையை விட தாழ்ந்த குலப் பெண்ணின் உடல் அசுத்தமானது போலும். பரசு இராமன் கதையில் உயிரோடு இருக்கும் பார்வதியின் தலை போன்று, பிள்ளையார் கதையில் பிள்ளையாரின் தலை வெட்டியதும் பிள்ளையாரின் (ஒரிஜினல்) தலை இல்லாமல் போவதும் அதன் பொருட்டு யானைத் தலையை ஒட்டவைப்பதும் வியப்பானதே. மாரியம்மனுக்கு சொல்லப்படும் பரசு இராமன் கதை, பிள்ளையார் கதைக்கு பிந்தியது என்பதால் தலை ஒட்டும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது என்று நாம் கொள்ள வேண்டும் போல். 
மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் கொண்டாடுவதும், ஆடித் திங்களில் தான், ஆடித் திங்கள் ஜூலை 15 - ஆகஸ்ட் 15 வரையில் வரும், அந்த திங்களில் வெள்ளிக் கிழமைகளில் (ஆடிவெள்ளி) ஒன்றில் அம்மன் கோவில்களில் விழா களைகட்டியிருக்கும், அப்பொழுது பள்ளிகள் துவங்கும் காலம், தேர்வுகள் நடைபெறும் காலமும் அல்ல, ஆனால் அவற்றை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தேர்வுக்கு படிக்கும் பொழுது, அம்மன் பாடல்கள் குறிப்பாக 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா...' பாடல் குடிசைபக்கத்தில் இருந்து இரைச்சலாக கேட்பதாகவும், படிப்பு கெடுவதாகவும் எந்திரன் படத்தில் காட்சி வைக்கப்பட்டு, அதை எந்திரன் நக்கல் அடித்து 'Who is செல்லாத்தா ?' என்று கேட்க படம் பார்ப்பவர்களுக்கு அது ஒரு (மலிவான) நகைச்சுவை காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் மாரியம்மனை கும்பிடும் ஏழை எளியோர் எதிர்ப்பு காட்டமாட்டார்கள் என்று துணிந்தே அந்த காட்சியை நகைச்சுவை என்ற பெயரிலும், அவ்வாறு மாரியம்மனை கும்பிடுவர்களில் ரவுடிகள் உண்டு, அவர்கள் 'ஆத்தாள கும்பிட்டுட்டு துண்ணூறு வாங்கிப் பூசிட்டு போ...பாஸாகிவிடுவாய்' என்கிற மூட நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் காட்சியாக்கப்பட்டுள்ளது.
உண்மையில் தேர்வு நெருங்கும் காலமென்றால் அது ஐயப்பன் சீசன் தான், ஜனவரி 12 ஆம் தேதிவரை ஐயப்ப சாமிக்கு மாலை போட்டவர்களின் பூசை புனஸ்காரங்கள் தான் நடைபெறும், ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஒன்றோ அல்லது இரண்டோ வெள்ளிக்கிழமைகள் சார்ந்த நிகழ்வு, ஆனால் ஐயப்ப சீசன் என்பது 42 நாள்களுக்கு அங்கங்கே உள்ள கோவில்களில் ஒலிப்பெருக்கிக் கட்டி வீரமணி அல்லது வீரமணி தாசன் பாடல்களை போடுவார்கள், ஷங்கர் போன்றோருக்கு 'Who is Saranam Ayyappaa ?' என்று அவற்றை நகைச்சுவையாக்கி கேட்கும் துணிவும் இல்லை, ஒரு வேளை கேட்டிருந்தால் இந்து இயக்கம், அந்த படத்தில் அந்த காட்சியை நீக்காமல் ஓட விட்டிருக்காது. இளிச்சவாய்கள் கூழ் ஊற்றிக் கொண்டாடுபவர்களும் அவர்களது நம்பிக்கையும் தான்.
போலிப் பகுத்தறிவு வாதியான நடிகர் விவேக் போன்றோர், லாரிக்கு எலுமிச்சைபழம் கட்டி இருப்பதை கிண்டல் அடிப்பார்கள், ஹெலிக்காப்பட்டரின் சர்கரத்தில் வைக்கும் எலுமிச்சைக்கும். மாலைக்கும் அவர்களிடம் இருந்து எந்த நகைச்சுவை காட்சியும் வைக்கத் தெரியாது.
தமிழகத்தில் இந்து என்று கூறிக் கொள்ளும் அனைவருக்குமே குலதெய்வம் என்று ஒன்று உண்டு, அந்த தெய்வங்களை வணங்குபவர்கள் அவர்களே தொட்டு கழுவி, பூசை செய்வது வழக்கம், ஆனால் அங்கு பிறந்த குழந்தையின் காது குத்திக்கு, முதல் மொட்டைக்கும் செல்வதுடன் சரி, பிறகு பொட்டல் காட்டில் கூரை இல்லாது அந்த குலசாமி அப்படியே தான் நிற்கும், ஆனால் இவர்களோ ஆகமவிதி கோவில்களில் திருக்கல்யாண உற்சவத்திற்கு ரூ 50,001 கட்டி  10 - 20 அடி தள்ளி உட்கார்ந்து 'திருக்கல்யாண கோலம்' பார்த்து முக்தி அடைந்ததாக நினைத்துக் கொள்வர். தமிழுக்கு இரண்டாம் இடமே என்று அறிவிக்கும் 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' எந்த ஒரு தமிழனையும் உறுத்தாது. 
மலேசிய தமிழர்களைப் பாருங்கள், இந்தியாவில் நீ பிள்ளையாருக்கோ அல்லது, பிற தெய்வங்களுக்கோ என்ன வேத கதைகளை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போ, எங்களுக்கு எங்கள் தமிழ் முருகனே உயர்வானவன், எங்களது குல சாமிகளே உயர்ந்தது என்று போற்று கின்றனர், தமிழ் இந்துகளுக்கு தை பூசமே பெருநாள், சிறப்பாகக் கொண்டாடத்தக்க திருநாள்,  என்று அவர்கள் போற்றுகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் ? பெரியாரை தமிழன் மறக்க மறக்க பெருச்சாளிகளின் ஊர்வலங்கள் தான் பெருகிவருகிறது. உண்மை தானே ?

No comments:

Post a Comment

ThirukKuRaL