தென்றல் (Thendral)

Sunday, August 11, 2013

பாரதிதாசன்

பாரதிதாசன் 
பாரதியாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நான் பணிபுரிந்துகொண்டிருந்த புதுச்சேரி வானொலியின் சார்பில், கவிக்கோமான் பாரதியின் எட்டயபுரம், கடையம், தென்காசி போன்ற ஊர்களுக்கு நேரில் சென்று சில ஒலிப்பதிவுகளைச் செய்யப் புறப்பட்டேன்.

முதலில் எட்டயபுரம். பாரதி வீட்டருகில் சில சிற்றுரைகள். நேர்காணல்கள், பின்னர் கடையம்.

பாரதியின் துணைவியார் செல்லம்மா, பாரதியின் மைத்துனி சொர்ணத்தம்மாவைச் சந்திக்கமுடிந்தது.

வற்றியமேனியும் வறுமையின் கோலமுமாக அவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலில் அவதியுற்றிருந்தார். "சுப்புரத்தினம் மகன்' என்று சொன்னேன்.

வாரியணைத்து ஆரத்தழுவி ஒரு குட்டித்திண்ணையில் அமரச்செய்தார். நோய்ப்படுக்கையில் இருந்தபடி, "சுப்புரத்தினம் மகனா? ரொம்ப சந்தோஷம்!

துஷ்டப் பையனாச்சே சுப்புரத்தினம். பாரதிக்கு அவனெல்லாம் செஞ்ச உபகாரம் கொஞ்சநஞ்சமா? அப்படிப் புதுச்சேரியில் வாழ்ந்த பாரதியை நாங்களே சாகடிச்சிட்டோம்னுதான் சொல்லணும்' கண்ணீர் வழிய சில சோக நிகழ்வுகளைச் சொல்லிமுடித்தார். சாதி மதக் கட்டுப்பாடுகளை மீறி பாரதி சமுதாயக் கேடுகளை உடைத்துக்கொண்டு புறப்பட்டதில் தம் குடும்பத்தாருக்கும் உறவினர்க்கும் எதிரியானார். எனவே புறக்கணிக்கப்பட்டார் என்பதை நன்கு உணர முடிந்தது.

ஒலிப்பதிவு முடிந்து ஊர் திரும்பும் வழியில் என்னோடு வந்த எட்டயபுரம் நரசிம்மன் என்கிற இசைவாணர்- நிலையக் கலைஞர் ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார். "உங்கப்பா முரடர்னும் முசுடர்னும் கடுங்கோபக்காரர்னும் சொல்றாங்களே!' என்றார்.

நான் சொன்ன விடை, "எட்டயபுரத்தாரின் மைத்துனி எடுத்த எடுப்பில் என்ன சொன்னார் பார்த்தீரா? "துஷ்டப்பையனாச்சே சுப்புரத்தினம்' என்று தொடங்கி பாரதிக்கு உபகாரம் செய்ததைக் குறிப்பிட்டார்களே! அதன் விளக்கம் என்ன?

நல்லதை ஆதரித்து உதவுதல். அதற்கு இடையூறாக ஏதேனும் எதிர்ப்பட்டால், அதை அடக்குதலின் பெயர் துஷ்டத்தனம்.


துடுக்கு, சினம், சிடுசிடுப்பு, முசுடு என்றெல்லாம் நாம் கருதும் சில முகங்கள் எப்போதெல்லாம் தோன்றுகின்றன என்பதை நான் நேரில் கண்டவன்;  உணர்ந்தவன்.'

இப்படி விளக்கம் அளிக்கத் தொடங்கிய நான் புதுச்சேரி வந்து அடையும்வரை பல நிகழ்ச்சிகளை எடுத்துச் சொன்னேன்.

உங்களுக்கும் சிலவற்றைச் சொல்லிக்காட்டவே இந்தத் தொடர்.

படித்து உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

ஆசிரியர் பணி முடித்து மாலை ஐந்தரை மணிக்கு வீடுவந்து சேருகிறார். காலை ஏழரை மணிக்கு பள்ளிக்குச் சென்றவர்; வந்த உடனே, அஞ்சல் ஏதாவது உண்டா என்பதை அறிந்து கொள்கிறார். நடுமுற்றத்தில்- சாய்வு நாற்காலியில் அமர்கிறார். அணிந்திருந்த "கோட்டை' யும் மேற்சட்டையையும் களைந்து சட்டையிடாத மேனியராய்க் காட்சி தருகிறார்.

அருகில், அம்மா வந்துநின்று களைந்துவிட்ட ஆடைகளை ஒரு கையில் பற்றிக்கொண்டு மற்றொரு கையில் சுவை நீர் சுடச்சுட அளிக்கிறார்.

ஆவலாய் அருந்தப் போகையில், "வாத்தியாரே!' குரல் ஒன்று அன்பு இழையோட அழைத்தது. உள்ளே வந்து நிற்கிறார் பச்சை உடையார்.

அருகில் கிடந்த கட்டை பெஞ்சை தரதரவென இழுத்து அப்பாவின் எதிரில் போட்டு, "காப்பி சாப்பிடறியா? சாப்பிடு சாப்பிடு' என்றார்.

அப்பாவுக்கு எரிச்சல்தான். என்ன செய்வது? பாரதி காலத்து  நண்பராச்சே பச்சையப்பர்.

சுவை நீரை அருந்திவிட்டு, "ஊம்?' என்ற கேள்வியை மட்டும் உதிர்க்கவும், பச்சையப்பர்தம் கைப்பையிலிருந்து சில தாள்களை எடுத்துப் படிக்கத் தொடங்கும்முன் நோக்கவுரை ஆற்றுகிறார்:

"காலையில அந்த ராம்பாக்கம் ரெட்டியார் வீட்டுக்குப் போனேனா! வாய்த்துடுக்கா ஒண்ணு கேட்டுட்டான்யா சுப்பு! என்ன பெரிய பாரதி!

அவுரு எழுதினதெல்லாம் பாட்டா? நீயும் அந்தாளுகூட சுத்தித்திரிஞ்சே! உருப்பட்டியா? அப்டின்னு எகத்தாளமாப் பேசிட்டான்.

உட்டுடுவனா? ஒடனே ஒரு கவி எழுதிப் பாடினேன்

பாரு. அசந்து போயிட்டானில்லே. நான் இப்ப படிக்கிறேன் சுப்பு நீ கேட்டு சொல்லுப்பா!'

நோக்கவுரை முடிந்து கவிதை வாசிப்பு!

ராம் பாக்கம் ரெட்டியாரே

ரயிலை நீர் பார்த்ததுண்டா?

யாம் அதில் பயணம் செய்தோம்

யாருக்கும் அது தெரியவில்லை!

பாரதிக்கு சிநேகிதன் நான்

யாருக்கதில் கஷ்டம் உண்டு!

ஊருக்கே சொல்லப்போறேன்

உனக்குமே ஆகட்டுமய்யா!

இந்த விதமான சில வரிகளை எடுத்துவிட்டார் பச்சையப்பர். அப்பாவின் உடலெங்கும் வியர்வை கொட்டிற்று. இவரின் பாட்டால் விளைந்த உணர்ச்சியன்று! சூடான சுவைநீர் அருந்தியதால்.

ஆனால் பச்சையப்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லை! சுப்புரத்தினமே அசந்துபோகும் அளவுக்கு நாம் எழுதிவிட்டோம் என்கிற பூரிப்பு.

இன்னும் அரைமணிநேரத்தில் இலக்கண வகுப்பு மாணவர் வந்துவிடுவார்கள்.  பச்சையப்பரோ ஓயாமழையாய்க் குறுக்கிடுகிறார்.

அப்பாவுக்குள் ஏதோ ஒரு கருத்து மின்னல்

"பழநி"ம்மா!'


அழைத்து நிறுத்துமுன் எதிரில் வந்து நிற்கிறார் அம்மா. அம்மாவுக்கும் புரிகிறது அப்பாவின் திணறல்.

அம்மா சொல்கிறார்."குளிக்கணும்னு வெந்நீர் விளாவிவைச்சிருக்கேன். ஆறிப்போகுதுங்களே!'

திடீர் வெடிகுண்டுதான் இந்தப் பொய். அப்பா வெகுசங்கடமாக எழுந்து, "பச்சையப்பா! உன் பாட்டு நல்லாவே இருக்கு. இன்னொருநாள் கேக்கட்டுமா போய்ட்டு வா!' என்று விடை வீச பச்சையப்பர் எழுந்து சுருள்கிறார்; மிரள்கிறார்; நகர்கிறார்; மெல்ல வெளியிற் செல்ல நழுவுகிறார்.

முரட்டுத்தனமோ மோதலோ நடைபெறாமல் அம்மா, தடுத்தாட் கொண்ட காட்சி இது.

அப்பா தப்பாக என்ன செய்து விட்டார்?

இடம், காலம், அறிந்து செயல்பட முடியாத பச்சையப்பர் தமது கவிதை ஆற்றும் திறனை பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வந்து இறக்கிய நேரமே பொருத்தமானதில்லை. இவரின் கவிதா மேன்மையும் கைதட்டி வரவேற்குமாறில்லை.

பொறுமைகாட்டி சிக்கலை அவிழ்த்துக்கொண்டுவிட்டார் அப்பா!

அம்மா துணைக்கு வந்திராவிடில், என்னை அழைத்து இடைநிறுத்தி எப்படியாவது சமாளித்துக்கொள்ளுமாறு நிலையைச் சரிக்கட்டிவிடுவார் அப்பா.

பொதுவாகவே இவர்மீது சுமத்தப்படும் பழிக்கு இவர்தான் காரணம் என்று சொல்லிவிட முடிவதில்லை.

புரட்சிக்கவிஞர்- இந்தப் பெயர் தமிழ் இலக்கிய உலகில் பூ வடிவில் தோன்றிய பூகம்பம் என்று கூறப்படும். அணுக்குண்டும் அபயம் கேட்டு நடுங்கும்விதமான தோற்றம். நடையும், நிலநடுக்கம் தரும்விதமான அதிர்வு.

எப்போதும் அது எரிமலை. சூதுமதியினர்மீது தணல்குழம்பை வீசும். ஏதிலார்மீது எல்லையில்லாப்  பரிவுகாட்டும்.

இருபதாம் நூற்றாண்டின் உணர்ச்சிக் கடல். பழகிவிட்டால் பயனுறு இலக் கியப்பனுவல். நகைச்சுவைப் பெட்டகம்.

அவரை எவரும் நெருங்க முடியாது என்பது ஒருபுறக்கருத்து.

இன்னொரு புறம் அய்யோ, எடுப்பார் கைப்பிள்ளையாச்சே என்கிற குழைவும் குலுங்கும்.

இதற்கெல்லாம் அப்பாவா முழுப் பொறுப்பு ஏற்கமுடியும்?

எனக்குள் எழுந்த வினாக்கள் எண் ணற்றவை. ஒருசில காட்சிகளில் உண்மை நிலவரம் தேடுவோம்!

(இன்னும் நடப்போம்)                                                                                              நன்றி : மன்னர்மன்னன் (nakkeeran)

No comments:

Post a Comment

ThirukKuRaL