தென்றல் (Thendral)

Saturday, August 31, 2013

கைதட்டி வரவேற்போம்!

கைதட்டி வரவேற்போம்!


ஒரு பெண் விவாகரத்துப் பெற்றுவிட்டாலும் அந்தப் பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் திருமண சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (26.8.2013) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை 50 விழுக்காடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள சொத்துகளில் பெண்களுக்கு உரிமை உடையது வெறும் இரண்டே இரண்டு விழுக்காடுதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்ணை, ஒரு சொத்தாகப் பாவிக்கும் மனப்பான்மை நம் நாட்டு மக்களுக்கு உண்டு. பெண்களை உயிருள்ள ஜீவன் என்று நினைப்ப தில்லை. அதனால்தான் வரதட்சணை என்ற ஆரியக் கலாச்சாரமே இங்கு புகுந்தது.

பெண்களைப் பெற்றவர்கள் ஏன் பெற்றோம் என்று கண்ணீர் விடும் கொடுமை இந்தப் பாரத புண்ணிய பூமியில்! தான்

பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படு வதும் இந்தச் சுமையால்தான்! மணமகன் டாக்டராக இருந்தால் அதற்கொரு தொகை, வெறும் ஆசிரியராக இருந்தால் தொகையில் கொஞ்சம் சலுகை.. - இத்தியாதி இத்தியாதி விலைவாசிப் பட்டியலை (மார்க்கெட் நிலவரம்) ஆண் ஆதிக்க உலகம் கையில் வைத்துள்ளது - வெட்கக்கேடு!

பெண் என்றால் திருமணம் செய்து கொடுத்து விட்டாலே போதும்.. அவருக்கு ஏன் சொத்து பத்துகள் என்று நினைக்கிற இந்துத்துவ மனப்பான்மை உள்ளவரை பெண்ணுலகம் தலை நிமிர்ந்திட முடியவே முடியாது.

இப்படிப்பட்ட சமூக அமைப்பில் பெண்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அடிப்படைத் தேவை கல்வியே! இந்த உரிமையை ஈட்டித் தருவதற்காக - இந்தப் பிரச்சினைகளை மய்யமாக கொண்டு - அதனை ஓர் இயக்கமாகவே நடத் தினார் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமைபற்றி, 1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தலைமையில், நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்குக் கல்வி உரிமை; இராணுவத்தில் கூட பெண்களுக்குப் பணிகள், என்று 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மா னத்தை, நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் முதல், பெண்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை, மேற்கொண்டது திராவிடர் இயக்கமே.

சமூகத்தில் உண்டாக்கப்பட்ட விழிப்புணர்வே, பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைக்கான சட் டங்கள், அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணம்.

பெண்கள் சொத்துரிமைப் பற்றிய மசோதாவை, மய்யப்படுத்தியே சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர், அமைச்சர் பதவியைத் தூக்கி எறிய நேர்ந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கும் சொத்துரிமைக்கு வழி வகுக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, நடைமுறையில் எந்த அளவுக்கு, அது செயல்பாட்டில் இருக்கிறது, என்பது கேள்விக்குறியே!

இந்தச் சூழலில் விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மகளிர் முன்னேற்றத் திசையில் சிறப்பானதோர் மைல் கல்லே!

சட்டம் வந்தால் மட்டும் போதாது - நடை முறையில் எந்த அளவுக்குச் செயற்பாட்டில் இருக்கிறது என்பதற்கான உத்தரவாதம்தான் மிக மிக முக்கியமாகும்.

சட்டத்தைத் திராவிடர் கழகம் கை தட்டி வரவேற்கிறது.
Nandri : Kavignar Kali.Poongundran

No comments:

Post a Comment

ThirukKuRaL