தென்றல் (Thendral)

Sunday, August 18, 2013

குளியலறையில் ஒரு பூரான்........!

குளியலறையில் ஒரு பூரான்........!
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
புகை வண்டி ஊர்ந்து வருதலைக் கவனித்ததுண்டா? மனது நிறைந்த கவிதை நிகழ்வு அது. குறிப்பாக வளைவில் காணும் நிகழ்வு....ஒரு பருவப்பெண், நாணம் அவள் உடல் முழுவதையும் கபளீகரம் செய்ய, ஒவ்வொரு அங்கமும், கோணி நடந்து வருவாளே ......அது போல ஓர் வெட்க உணர்வை நானும் உணர்ந்திருக்கிறேன். மரங்களிலும், பறவைகளிலும், பூச்சியினங்களிலும் அழகுணர்வை நான் மட்டும் காணவில்லை. ஆழ்வார்கள் கண்டார்கள், சித்தர்கள், நாயன்மார்கள் என பட்டியல் நீண்டு, சலீம் அலி, வண்ணதாசன், தியோடர் பாஸ்கரன் என போய்கொண்டேயிருக்கிறது. பாம்புகள், பூரான்கள் போன்றவை ஊர்ந்து வருதல் கவனத்திற்குரிய நிகழ்வு .அவைகளின் உடல் மொழி, அது அடுத்து செயல்படயிருக்கிற செயலை குறிக்கும்.
அந்தோணி சாரின் இருமகள்களும் அடுத்தடுத்த நாள் பூரான் கடிக்கு இலக்கானார்கள். முதல் நாள் மேரி அக்கா, இரண்டாம் நாள் சரண்யா. ஒருவர் தொடையிலும் மற்றவர் முதுகிலும் தாக்குண்டார்கள். மிக்கடுமையான வலியும், வீக்கமும் இருப்பதாய் அவர்கள் அழுது கொண்டே கூற, வீட்டில் உள்ள ஆடவர்கள் பூரான் வேட்டையில் ஈடுபட்டார்கள். தாமஸ் சார் அவர்களுடைய அண்ணன். எனக்கு கணிதம் மற்றும் வரலாறு-புவியியல் ஆசிரியர். அவருடைய அந்தரங்க சிஷ்யனான எனக்கு, பலவித சலுகைகள் உண்டு. அவருடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓட்டிப்பழகலாம், அவ்வப்போது அவர் கொணரும் தின்பண்டங்களை பகிர்ந்துண்ண அனுமதி ,நான் விரும்பும் செடிகளை தாராளமாக பிடுங்கித் தருவார். அதைவிட முக்கியமாக பரீட்சைக்கு முதல் நாளே சில கேள்விகளை தந்து, என்னை படிக்க வைத்து மறுநாள் தேர்வில் உறுதியான பாஸை வழங்கி கௌரவிப்பார். என் அண்ணனின் கிரிக்கெட் டீமில் பிரதான துல்லிய ஃபாஸ்ட் பவுலரும் அவரே. அன்று அவரது தம்பி என்னை அண்ணன் அழைப்பதாய் கூறி அழைத்துப் போய் அவர்களோடு தேடுதல் வேட்டையில் ஈடுபட பணித்தார். மேரி அக்காவின் பாட்டி, சேசுவே எந்தப் பாவமும்  அறியாத எங்குடும்பத்துக்கு எதுக்கய்யா இந்த சோதனை என ஒரு புகைப்படத்திற்கு முன் மண்டியிட்டு அழுது கொண்டிருந்தார். தன் இரு உள்ளங்கைகளும் நமக்கு தெரியும் படி காண்பித்து, தனது இருதயத்தை முள்ளாள் வளைத்துக் கட்டியும், அழாமல் நம்மை சோகமோடு பார்க்கும் ஏசு கிறிஸ்து அப்படத்தில் வரையப்பட்டிருந்தார். 
அடுப்பறையின் கழிவுப்பாதையில், இறுதியில் கண்டறியப்பட்டது அந்த பழுப்பு நிறப் பெரும் பூரான். அதன் ஊர்ந்து செல்லும்அழகும், தான் கொல்லப்படப்போகிறோம் என முன்னமே உணர்ந்தது போன்று பதட்டப்படாத செய்கையும் என்னை ,அதனை கவனிக்கத் தூண்டியது. பொட்டப்புள்ளையாடா அது...உத்துப்பாக்குற ...ஓங்கி அட்றா... என சார் உத்தரவிட்ட மறு வினாடி என் செருப்பால் தாக்குண்டு மாண்டு போனது. உண்மையில் கடித்தது அதுதானா என்ற சந்தேகம் இன்று வரை தீரவில்லை. 
கணுக்காலிகள் குடும்பத்தை சேர்ந்த பூரான்கள் 8000 வகை உள்ளதாய் கணக்கிடப்பட்டாலும் 3000 மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் ,இந்தியாவில் உள்ளவற்றில்  4 வகை மட்டுமே மிகத் தீவிர விஷம் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் காலிகள் என அழைக்கப்பட்டாலும் உண்மையில் 32 கால்கள் மட்டுமே கொண்டவை. இதன் உடலமைப்பு மிகுந்த விசேஷம் கொண்டவை. 7 முதல் 11 அடுக்குகளாய் பிரிக்கப்பட்டிருக்கும் உடலில் முதல் கட்டில் கால்கள் கிடையாது. மாறாக உணர்வுக் கொம்புகள் போன்ற இரு கவ்வையாக குழாய் அமைப்பு இருக்கும். இதுவே விஷத்தை உட்செலுத்தும் உறுப்பு. இரையையோ அல்லது தனது இலக்கையோ கண்டறிந்த பின் இந்த இரு கவ்வையால் கவ்வி, அது கொண்டே தோலை துளைத்து, விஷத்தை உட்செலுத்தும். தாக்குதலுக்கு உள்ளான இரை, சிறிது நேரத்தில் மயக்கமுற்று, தன் செயல்பாட்டை இழக்கிறது. அப்போது, இவை அவற்றின் உடலை நார்நாராக கிழித்து உண்ணத் துவங்குகின்றன. விஷம் ஏற்றி.... புலால் மட்டுமே உண்ணும், ஊர்ந்து செல்லும் உயிரிகளில் பூரானும் ஒன்று என்கிறார் ஃபார் கெயின்ஸ்டீன். இவர் கணுக்காலிகள் குறித்த ஆய்வில் ஈடுபடும் கனடா நாட்டு விஞ்ஞானி. மனிதனுக்கு, இதன் கடி மிகுந்த வலியை மட்டுமே ஏற்படுத்தும். 
பூரான்கள் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலேயே வாழ்கின்றன. மர இலைகளின் அடிப்பாகம், மக்கிய பொருட்கள், செடி ,தழைகள் போன்றவை இதன் வசிப்பிடம். என் மாடித் தோட்டத்தில் ஏராளமான பூரான்கள் உண்டு. செடிகளைத் தாக்கும் சிறு பூச்சிகளை இவை உண்பதால் ,உழவர்களின் நண்பனாக இது கருதப்படுகிறது. குறிப்பாக மண்புழுவின் குட்டிகளை தாக்க வரும் சிவப்பு எறும்புகளை உண்டு, மண்புழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது. 
அமேசான் காட்டில் காணப்படுபவை 30 செ.மீ நீளம் கொண்டதாகவும், பாம்பு, எலி, அணில், சிறு பறவைகளை வேட்டையாடி உண்பதாகவும் உள்ளன. 1875களில் அமெரிக்காவில் இது அறிமுகப்படுத்தப்பட்டதாய் ஒருகுறிப்பு கூறுகிறது. ஆனால் இது குறைந்தது 400 ஆண்டு பழமையான தாக இருக்கலாம் என்கிறார் டாக்டர். ஸ்டீவ். இந்திய கிராமங்களில்  , பாலூட்டும் தாய்மார்கள் உள்ள வீட்டில் அழுக்கு வாடை நிறைந்த இடங்களில், அவ்வாசனையை நுகர்ந்து  பூரான்கள் வரும் என்ற நம்பிக்கை உண்டு. இதன் வருகையை தவிர்க்க பூண்டு, பெருங்காயக் கலவையை ஆங்காங்கே தெளிப்பதை பார்த்திருக்கிறேன். தற்போதைய ஓர் ஆய்வில் அது நீல நிறம் கொண்ட துணிகளை ஒட்டி வருவதாக கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்த ஆண்களும், ஆஸ்திரேலியாவில் நீல நிற உடை அணிந்த பெண்களும் வீட்டில் அதிக பூரான் தாக்குதலுக்கு ஆளானார்கள். அந்த நாடுகளில் இவைகளை அழிக்க பெரும் கம்பெனிகளே உள்ளன. அவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை தந்து தாங்கள் உதவ தயாராக இருப்பதாய் விளம்பரம் செய்கிறார்கள். 
பூரான்கள் கும்பலாக வாழ்பவை. அங்கு தலைவன், தலைவி போன்ற அதிக பகிர்வுகள் கிடையாது. ஏனெனில் இங்கு காதலோ, காமமோ கிடையாது. எனவே உடலுறவு என்ற நிகழ்ச்சியே நடைபெறுவதில்லை. குறைந்தது 5 ஆண்டுகள் வரை வாழும், பூரான்கள் இரண்டு ஆண்டுகளில் பருவமெய்கிறது. ஆண் தனது உமிழ்நீராலும் சிறு குப்பைகளை கொண்டும் கூடமைக்கிறது. இது தரைகளில் வாழும் சிலந்திகள் கட்டும் கூடு போன்ற தோற்றமளிக்கும். இந்தக் கூட்டில் தனது விந்துத் துளிகளை தெளித்து விட்டுச் செல்லும். தனது நுகர்வு குழாய் மூலம் உணர்ந்த பெண் அங்கு வந்து  பின்புறம் அமையப் பெற்ற கொடுக்குகளின் உதவியோடு விந்துக் குவியலை கூண்டோடு அள்ளிச் சென்று தனது இருப்பிடம் சேர்க்கும். பின் கருமுட்டைகளை அதன் மீது பீய்ச்சி, சில தினங்கள் காவல் இருக்கும். லார்வாக்கள் போல குட்டி பூரான்கள் உருவாகி வரும் வரை பெண் பூரானும், சமயம் ஏற்படின் ஆணும் காவல் காக்கும். சுமார் 40 குட்டிகள் பிறந்தாலும், மிஞ்சுவது பத்திற்குள் மட்டுமே . குட்டிப் பூரானும் தாயைப்போலவே விஷம் கொண்டவை.
இவைகள் கூட்டுக் கண் அமைப்பு கொண்டவை. குறைந்தது 10 என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே பார்வைத்திறன் கொண்டிருக்கும். அவையும் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இரையையோ, எதிரிகளையோ தன் பார்வையால் அறிந்து கொள்வதை விட தன் உணர்வுக்குழல்கள் மூலமே அதிகம் அறிகிறது. துவக்கத்தில் இரு கால்களோடு பிறக்கும் இவை வளர வளர இவற்றின் அடுக்குகள்  ஒவ்வொன்றாக கூடும் ,கால்களும் கூடும். நன்கு வளர்ந்தவை 16 அல்லது 17 அடுக்குகளோடு காணப்படும். அசம்பாவித்தின் போது கால்கள் உடைந்தாலும், மீண்டும் வளரும் இயல்பு கொண்டவை. அதிக கால்களைக் கொண்டதால் இவைகளால் மிக விரைவாக ஓடி ஒளிய முடிகிறது. கால்களும் ,கொடுக்கும் பார்வைக்கு ஒன்று போல் இருப்பதும், முன்புற, பின் புற வேற்றுமை குறைபாடும், இரைகளை திக்குமுக்காடச் செய்கிறது. 
உடலில் ஏற்படும் அதிக வேர்வையும், வளர்ச்சிக்கு உதவும் மெழுகு போன்ற தோல் உரித்தலும், அதிக தண்ணீர் தேவையை உண்டாக்கும் எனவே இவை வெப்பம் நிறைந்த பகுதிகளை, பருவ காலம் தவிர பிற காலங்களில் விரும்புவதில்லை. ஆப்பிரிக்க பழங்குடிகள் இதனை சாத்தானின் சேவகர்கள் என்கிறார்கள். பூரான் கடியிலிருந்து காப்பாற்ற கந்த சஷ்டி கவசத்தின் மூலம் முருகன் உத்திரவாதம் அளிக்கிறான். சீனர்கள், வழக்கம் போல், மூட்டுவலி மருந்தை இதன் உடலிலிருந்து தயார் செய்கிறோம்  என கொன்று குவிக்கிறார்கள். இன்றும் மனித குலத்தால் வெறுக்கப்படும் இச்சிறிய ஜீவன் உண்மையில் புறந்தள்ள வேண்டிய உயிரினமே அன்று. 
kannan233@gmail.com

No comments:

Post a Comment

ThirukKuRaL