தென்றல் (Thendral)

Wednesday, February 5, 2014

எதிரொலியின் சில கருத்துக்கள்!_(1)

கனிமொழி, கலைஞர்.கருணாநிதி, கட்சி மற்றும் சில கருத்துக்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி - எதிரொலி

எதிரொலியின் நல்ல நண்பரும், அதிதீவிர திமுக அபிமானியும் தொண்டருமான ஒரு நண்பர் எதிரொலியிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். திமுக என்பது தமிழர்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறது. அதன் தலைவர் மு கருணாநிதி அந்த கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசியலிலுமே மிக உயர்ந்த தலைவர். எத்தனையோ சாதனைகள் செய்திருக்கிறார். இன்றுவரை ஓயாமல் உழைக்கிறார். அப்படிப்பட்ட உயர்ந்த தலைவர், வாழ்நாள் சாதனையாளர், அவரது குடும்ப உறுப்பினர்களின் செயல்களால் இளைய தலைமுறையினரால் எள்ளி நகையாடப்படும் சூழலில் சிக்கியிருக்கிறார். அவர் தனது இன்றைய நிலைக்கு காரணமான தனது குடும்ப உறுப்பினர்களை உடனடியாக கட்சியிலிருந்தும் அரசியலில் இருந்தும் ஒதுக்கி வைக்கலாமே. அழகிரியை கட்சியிலிருந்து நீகியிருப்பதைப்போல 2ஜி வழக்கில் கட்சிக்கும் கருணாநிதிக்கும் மிகப்பெரிய கெட்டபேரைத் தேடித்தந்திருக்கும் கனிமொழியை அவர் விலக்கி வைக்கலாமே? அதன்மூலம் கட்சிக்கும் கருணாநிதிக்கும் நல்லது தானே?

இதுவே அந்த தீவிர திமுக தொண்டர் எதிரொலியிடம் முன் வைத்த குமுறல். கேள்வி. ஆதங்கம். ஏறக்குறைய இந்த மனநிலையை அவரைவிட வயதிலும், அனுபவத்திலும், எதிரொலியைவிட பட்டறிவும், படிப்பறிவும், அரசியல் முதிர்ச்சியும் பெற்ற, எதிரொலி மதிக்கும் வேறு சிலரின் முகநூல் பதிவுகள் மற்றும் சில பல கமெண்டுகளிலும் எதிரொலியால் கவனிக்க முடிந்தது.

இந்த கேள்வி, ஆதங்கம், குமுறல்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியவர் திமுக தலைவர் மு கருணாநிதி. அவரது கட்சி மற்றும் அதன் நிர்வாகிகள். அவர்கள் சொல்லக்கூடும். சொல்லாமலும் போகக் கூடும். அது அவர்கள் சவுகரியம்.

ஆனால் இந்த கேள்விகள், குமுறல்கள், ஆதங்கங்கள், ஆயாசங்களுக்கு எதிரொலி தனக்கு தெரிந்த அளவில், தன்னுடைய அரசியல் புரிதலின் அடிப்படையில் கொஞ்சம் நீண்ட பதிலை எழுதவிரும்புகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இன்றும் நாளையும் அந்த பதில்கள் பகுதி பகுதியாக எதிரொலியில் வரும். இந்த நீண்ட பதில் முடியும்வரை வேறு பதிவுகள் எதிரொலியில் வராது.

இந்த சர்ச்சைக்குள் செல்வதற்கு முன் இரண்டு முன் ஜாமீன் மனுக்களை எதிரொலி போட்டு வைக்கிறது. முதலாவது முன்ஜாமீன் மனு--எதிரொலி என்பது இன்றைய நிலையில் திமுகவை ஆதரிக்கும் ஒரு அரசியல் நிலையிலிருந்து இந்த விவகாரத்தை அணுகும் திராவிட இயக்க ஆதரவு அரசியல் தளம். அவ்வளவுதான். அதற்கு மேல் திமுகவுக்கும் எதிரொலிக்கும் எதிரொலியின் இந்த பதிவுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் வைக்கும் வாதங்கள் எல்லாமே எதிரொலியின் சொந்தக்கருத்துக்கள். திமுகவின் அதிகாரப்பூர்வ கருத்துக்களல்ல.

ஜாமீன் மனு 2: எதிரொலி பொதுவாழ்வில் மட்டுமல்ல, தனி மனித வாழ்விலும் ஊழலை முழுமையாக எதிர்க்கிறது. வெறும் லஞ்சம் மட்டுமே ஊழலல்ல. ஊழல் என்பது லஞ்சத்திற்கு வெளியிலும் இருக்கிறது. உங்கள் குடும்ப உறுப்பினருக்கும், சொந்த ஜாதிக்காரனுக்கும் செய்யும் சிறு சலுகையில் துவங்கி, உங்கள் குழந்தைக்காக நீங்கள் செய்யும் எல்லாவிதமான நியாயமற்ற செயல்களுமே ஊழல் தான். பள்ளிக்கூடத்தில் கட்டும் சட்டவிரோத பீஸும் இதில் அடங்கும். சட்டவிரோதமான கட்டிடம் கட்டி அதில் சலுகைவிலையில் துணிகளை விற்கும் சரவணாஸ்டோர்ஸில் துணிவாங்கி அதை ஊக்குவிப்பதும் ஊழல் தான். எனவே ஊழலின் எல்லா வடிவங்களுக்கு எதிராகவும் எதிரொலி தொடர்ந்தும் குரல் கொடுக்கும். அதே போல அரசியலில் குடும்ப ஆட்சி அல்லது வாரிசு அரசியலை தொடர்ந்தும் எதிரொலி எதிர்க்கிறது. திமுகவில் மட்டுமல்ல திமுகவுக்கு வெளியிலும். வாரிசு என்பது ஒருவரின் மனைவி, துணைவி, மகன், மகள் மட்டுமல்ல, வைப்பாட்டிகள் என்று ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் உடன்கட்டைகளையும் வாரிசுகள் என்றே எதிரொலி பார்க்கிறது. அதனால் தான் கனிமொழி, அழகிரி போன்றவர்கள் தவறு செய்வதாக எதிரொலி கருதியபோது அவர்களை தயவுதாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறது. விமர்சித்திருக்கிறது. இனியும் அவர்கள் விஷயத்தில் அதே அணுகுமுறை தொடரும். அதில் ஒருநாளும் மாற்றமில்லை. அதில் எதிரொலி தெளிவாக இருக்கிறது.

அப்படி ஊழலை எதிர்க்கும், வாரிசு அரசியலை எதிர்க்கும் எதிரொலி தொடர்ந்தும் 2ஜி விவகாரத்தில் ஆண்டிமுத்து ராசாவுக்காக குரல் கொடுப்பது ஏன்? அதன் தொடர்ச்சியாக நேற்றிலிருந்து மீண்டும் தூசு தட்டப்படும் கனிமொழி ஆடியோ டேப் விவகாரத்தில் கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன் என்கிற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்வி. அதற்கு பதில் சொல்ல எதிரொலி கடமைப்பட்டிருக்கிறது.

இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமானால் கீழ்கண்ட இரண்டு முக்கிய கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டும்.

1. 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று இந்திய/தமிழக ஊடகங்களால் இன்று பரவலாக அழைக்கப்படும் இந்த ஒட்டுமொத்த கூத்துமே, ஊழல் ஒழிப்புக்கான உண்மையான முன்னெடுப்பா?

2. அல்லது “ஊழல் ஒழிப்பு” என்கிற அரசியல் ஆயுதத்தை, மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, டில்லை அரசியல் அதிகார கட்டமைப்பை தன் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இன்றுவரை வெற்றிகரமாக இயக்கி வரும் டில்லியை மையமாகக் கொண்ட பார்ப்பண/பனியாக்களின் ஆதிக்க வர்க்கம் (அது ஜாதி, பெருவர்த்தகம் மற்றும் அரசு பதவிகள் ஆகிய மூன்றும் கலந்த கலவை) ஆடிக்கொண்டிருக்கும் அரசியல் சதுரங்க விளையாட்டா?

எதிரொலியின் பார்வையில் ஒட்டுமொத்த 2ஜி வழக்கும் டில்லி அரசியல் அதிகார வர்க்கம் ஆடும் சதுரங்க விளையாட்டு மட்டுமே. ஊழல் ஒழிப்புக்கும் இந்த ஒட்டுமொத்த கூத்துக்கும் ஒரு புண்ணாக்குத் தொடர்பும் இல்லை. ஆரம்பம் முதலே இது தான் எதிரொலியின் நிலை. இன்றும் அதை மாற்றிக்கொள்ளத் தக்க ஒரு உருப்படியான காரணமும் எதிரொலிக்கு கிடைக்கவில்லை.

2ஜி ஊழலில் இந்திய அரசாலும், உச்சநீதிமன்றத்தாலும், சி பி ஐயாலும் விரட்டி விரட்டி வேட்டையாடப்படும் ஆ ராசா மற்றும் கனிமொழிக்கும் இவற்றையெல்லாம் தனது சுண்டுவிரலில் ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன தனிப்பட்ட பகையா? வயல்வரப்பு தகறாரா? ஒன்றுமில்லை.

உண்மையான பிரச்சனை தான் என்ன? மன்மோகன் சிங் என்கிற உலக மகா அயோக்கியன் 2009 ஆம் ஆண்டு இரண்டாம் முறை வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதல் தனக்கு சொந்த பலம் இருப்பதாக அவனும், அவனுடைய காங்கிரஸ் கட்சியும் நம்ப ஆரம்பித்தன. அந்த ஆணவம் அவர்கள் தலைக்கேறியதன் விளைவுதான் இந்த ஒட்டுமொத்த பிரச்சனைக்குமான மூல காரணம். அப்படி தங்களுக்கு தனிப்பட்ட பலம் இருப்பதாக காங்கிரஸ் தலைமையும், மன்மோகன் சிங்கும் நினைக்க, நம்ப ஆரம்பித்த மறு நிமிடம், காங்கிரஸும், மன்மோகன் சிங்கும், 2009 ஆம் ஆண்டு அமையவிருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் திமுக அமைச்சர்களாக யார் யார் நியமிக்கப்பட வேண்டும், யார் யார் நியமிக்கப்படக்கூடாது என்பதை, அதற்கு முன்பு நடந்ததைப் போல திமுக தலைவர் என்கிற முறையில் மு கருணாநிதி நிர்ணயிக்கக்கூடாது என்று சொல்லி மன்மோகன் சிங் கருணாநிதிக்கு நிபந்தனை போட்டான். சொந்தமாக ஒரு வார்டு கவுன்சிலில் கூட நிற்க முடியாத மன்மோகன் சிங் என்கிற அயோக்கியன், அவனை இருமுறை பிரதமராக்கிய கருணாநிதியை டில்லியில் வைத்து அவமானப்படுத்தினான். காங்கிரஸ் தலைமையும் இந்த கேவலத்தை கண்டுகொள்ளவில்லை.

2009 ஆம் ஆண்டில் அமையும் புதிய ஆட்சியில் தானும் தனது கட்சியும் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்த கருணாநிதி டில்லியிலிருந்து பேசுவார்த்தைகளின் பாதியிலேயே கோபமாக சென்னை திரும்பினார். பதவியேற்பில் கூட கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.

அன்று விழுந்ததுதான் 2ஜி ஊழல் என்கிற இடியாப்பச் சிக்கலின் முதல் முடிச்சு. அதற்கு முன்பே இந்த விவகாரம் அரசல் புரசலாக வெளிவந்திருந்தது, 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பேசப்பட்டது என்றாலும், 2009 தேர்தலில் காங்கிரஸ்கூட்டணியின் வெற்றி என்பது அந்த கட்சிக்கும் மன்மோகன் சிங்குக்கும் கிடைத்த தனிப்பட்ட வெற்றி என்று காங்கிரஸ் கட்சியும் அதன் பிரதமர் மன்மோகன் சிங்கும் நம்ப ஆரம்பித்ததன் விளைவுதான், அவர்கள் 2ஜி விவகாரத்தை வைத்து திமுகவை “போட்டுப்பார்க்கலாம்” என்கிற திமிரை அவர்களுக்கு கொடுத்தது.

விளைவு, காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிகபட்ச சுயமரியாதையுடன் செயல்பட்டுக்கொண்டிருந்த திமுகவையும் அதன் தலைவர் மு கருணாநிதியையும் மட்டம் தட்டிவைக்க, முடிந்தவரை கேவலப்படுத்த, அதன் அரசியல் ஆளுமையை சிதைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, மன்மோகன் சிங்கும், காங்கிரஸும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிபிஐயும் கூட்டு சேர்ந்து செயல்பட்டன. தயாநிதி மாறன் என்கிற கருணாநிதி வீட்டின் தறுதலை பிரகலாதனும், சிவகங்கை தொகுதியில் தேர்தலில் தோற்று, கருணாநிதி அரசின் தயவில் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட ப சிதம்பரமும், டில்லியின் பார்ப்பண/பனியா கும்பலும் அவரவர் பங்குக்குக்கு அவரவர் தனித்தனி நோக்கத்துக்காக இதில் தாமாக வந்து சேர்ந்துகொள்ள, அவர்கள் எல்லோருமாக சேர்ந்து சமைத்ததே 2ஜி ஊழல் என்கிற மாயமான். 24 மணிநேர டி ஆர் பி ரேட்டிங்குகளுக்கான போட்டியில் இருந்த ஊதாரி ஊடகங்களும் இதில் சேர்ந்து கொள்ள, உலக மகா ஊழலாக இதை ஊதிப்பெரிதாக்கின.

இப்படி டில்லி அரசியல் சதுரங்கத்தில் கருணாநிதி என்கிற தலைவனை குறிவைத்தவர்களுக்கு பணயமாக கிடைத்தவர் கனிமொழி என்கிற அவரது மகள். பாண்டவர்களை பழிவாங்க விரும்பிய கவுரவர்களுக்கு திரோபதை கிடைத்ததைப்போல. அவர்களின் இலக்கு கனி மொழியல்ல. கருணாநிதி. ஆனால் “ஆநிரை கவர்தல்” என்கிற பழைய போர்த்தந்திரத்தின் படி, எதிரி வீட்டின் சொத்தை பணயம் பிடித்தால், எதிரி பணிவான் என்கிற குரூரமான போர் உத்தியை டில்லியின் மன்மோகன் சிங்கும், சி பி ஐயும், காங்கிரஸ் கட்சியின் தலைமையும் தெரிந்து திட்டமிட்டு செய்தன. துரதிர்ஷ்டவசமாக அதற்கான விலையை கருணாநிதி அன்று முதல் இன்றுவரை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து அவரது கட்சியும் கொடுத்தது. இன்னும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இதில் முக்கியமாக நினைவில் கொள்ளவேண்டிய செய்தி இந்த 2ஜி விவகாரத்தில் சிக்கித்தவிக்கும் கலைஞர் டி வி என்பதை பலரும் நினைப்பதைப் போல கனிமொழி ஆரம்பிக்கவில்லை. அதை ஆரம்பித்தவர் முழுக்க முழுக்க கருணாநிதி. அதை ஏன் அவர் ஆரம்பித்தார்? அதுவும் அவசர அவசரமாக? காரணம் மாறன் சகோதரர்கள் கருணாநிதிக்கு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் துரோகத்துக்கு பதிலடியாக உருவானது தான் கலைஞர் டிவி. அந்த கலைஞர் டிவி என்பது முழுக்க முழுக்க திமுக என்கிற கட்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தொலைக்காட்சி. அதில் டம்மியாக சேர்க்கப்பட்டவர்தான் கனிமொழி. அவரை பலவந்தப்படுத்தி இதில் சேர்த்தவர் கருணாநிதி. இதை கருணாநிதியே பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக கலைஞர் டிவியின் உண்மையான உரிமையாளர் கனிமொழி அல்ல. அவர் பெயர் வேறு. அந்த பஞ்சாயத்து இங்கு தேவையில்லை என்பதால் எதிரொலி அதற்குள் போகவில்லை.

ஆக, கூட்டணியில் இருந்தபடி தனக்கு நிபந்தனை விதித்துக்கொண்டிருந்த திமுக என்கிற வலுவான மாநில கட்சி மற்றும் அதன் தலைவரை மட்டம் தட்ட காங்கிரஸும், மன்மோகன் சிங்கும் சிபிஐ பயன்படுத்தி 2ஜி பூதத்தை உருவாக்கினார்கள். மாறன் சகோதரர்கள் திமுக கட்சிக்கும், கருணாநிதிக்கும் செய்த துரோகத்துக்கு பதிலடியாக கருணாநிதி அவசர அவசரமாக ஆரம்பித்த கலைஞர் டி வியில் கனிமொழியை டம்மியாக பலவந்தமாக சேர்த்து இந்த ஒட்டுமொத்த சிக்கலில் அவரை சிக்கச் செய்தார் கருணாநிதி. இதுதான் இந்த 2ஜி வழக்கில் கலைஞர் டிவிக்கும் கனிமொழிக்குமான தொடர்பின் ஒட்டுமொத்த பின்னணியாக எதிரொலி புரிந்து கொள்கிறது.

இந்த ஒட்டுமொத்த பின்னணி தெரியாமல், இதில் எதிர்தரப்பின் சூழ்ச்சி என்ன இலக்கு என்ன என்பது முழுமையாக புரிந்துகொள்ளாமல், கனிமொழியை கழட்டி விட்டால் கட்சிக்கு நல்லது என்பதை எதிரொலி ஒருநாளும் ஆதரிக்க முடியாது. அதுவும் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, கனிமொழியை குற்றவாளியென தீர்ப்பெழுதும் செயலில் எதிரொலிக்கு உடன்பாடில்லை.

ஏற்கெனவே கீழ் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டு, இன்றும் ஊழல் வழக்கை சந்தித்துவரும் ஜெயலலிதா தமிழக முதல்வராக ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில், அடுத்து அவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பிரதமராகலாம் என்று ஊழலற்ற கட்சிகளாக தங்களை இன்றுவரை பெருமை பேசிக்கொள்ளும் இடதுசாரிகள் இருக்கும் இந்திய திருநாட்டில், வழக்கை எதிர்கொள்ளும் நிலையிலேயே கனிமொழியையும், ஆ ராசாவையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று கோருவது எந்தவகை நியாயம் என்று எதிரொலிக்குத் தெரியவில்லை.

தமிழக முதல்வராக தொடரவும், இந்திய பிரதமராக முன்னிறுத்தப்படவும் ஜெயலலிதாவுக்கு இருக்கும் எல்லா நீதி நியாயங்களும் இன்னும் எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படாத கனிமொழிக்கும் உண்டு என்பதே எதிரொலியின் ஒரே வாதம்.

காரணம், உலக அளவிலாகட்டும், இந்திய தமிழக அளவிலாகட்டும், அரசியல் என்பது ஒருவகையான போர். இதில் ஒரு அரசியல் கட்சியின் சார்பில் ஒருவரை பலியிடுவது என்பது வேறு வழியே இல்லாமல் இறுதி முடிவாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, போரின் ஆரம்பத்திலேயோ, இடையிலேயோ அந்தப்பெரிய முடிவை எடுக்க முடியாது. எடுக்கவும் கூடாது. அதிலும் இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க கருணாநிதி எடுத்த முடிவுக்கு, கனிமொழியை பலியிடச்சொல்லும் போக்கு மிகப்பெரிய தவற்றில் போய் முடியும் என்றே எதிரொலி பார்க்கிறது.

கண்டிப்பாக 2ஜி வழக்கு என்பது திமுகவுக்கும், கருணாநிதிக்கும் இன்னொரு எமெர்ஜென்ஸி என்றே எதிரொலி கருதுகிறது. அதில் எதிரொலிக்கு எந்த சந்தேகமும் இல்லை. நேற்றைய டேப் மட்டுமல்ல இதைவிட பெரிய நெருக்கடிகள் இந்த 2ஜி வழக்கை முன்வைத்து திமுகவுக்கு வரப்போகிறது. குறிப்பாக இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை இது தொடர்பான “திடீர், குபீர்” ஆதாரங்கள் தொடர்ந்து அவ்வப்போது வெளியிடப்படக்கூடும் என்றே டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தமாதிரி சமயத்தில், கனிமொழியை கட்சியிலிருந்து கழற்றிவிடு, ஆ ராசாவை தள்ளிவை என்று கேட்பது திமுகவிற்குள் உள்குத்தாக மட்டுமல்ல, உயிர்பலியாகவும் முடியும் ஆபத்திருக்கிறது. எனவே இதில் எதிரொலி கவனமாக கருத்து சொல்ல விரும்புகிறது.

காரணம் இதில் கருணாநிதி மட்டுமல்ல, இந்த பிரச்சனையில் ஒட்டுமொத்த கட்சியும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எதிரொலியால் இந்த பிரச்சனை பற்றி இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். மற்றவை நடக்கும்போது உங்களுக்கே புரியும்.

அடுத்து இன்று கனிமொழியை வழக்கில் சிக்கவைத்து கருணாநிதியை பணியவைக்கும் இதே காங்கிரஸ் தலைமையும், டில்லி அதிகாரவர்க்கமும் எமெர்ஜென்ஸியின் போது மு க ஸ்டாலினையும் இதே போல்தான் சிறைவைத்தது. அப்போது ஸ்டாலினுக்கு எதிராக காங்கிரஸ்காரர்கள் என்னவெல்லாம் சொன்னார்கள் என்பது தெரிந்தவர்களுக்கு இன்றைய கனிமொழியை மையப்படுத்திய ஊடக பிரச்சாரம் ஒன்றும் புதிதுமல்ல. அதிர்ச்சியளிப்பதுமல்ல. அதைப்பற்றி அடுத்த பகுதியில் எதிரொலி பேசும்.


No comments:

Post a Comment

ThirukKuRaL