தென்றல் (Thendral)

Monday, February 17, 2014

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?

வெள்ளி, 31 ஜனவரி 2014 15:51
(இவ்வினாவை விடுத்திருக்கம் நண்பர் வேல்சாமி ஆடுதுறையைச் (தஞ்சை மாவட்டம்) சார்ந்தவர். கடவுள் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை எப்படி இருந்தது என்று வீணாக நாம் ஆராயத் தேவை இல்லை. 2.1.1949 திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை அப்படி தந்து விட்டால் விவரம் புரிந்து விடும் என்று கருதி அக்கட்டுரையை இதோ தருகிறோம். - ஆ.ர்)
மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை.
மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்கு வதாகும். அப்படியென்றால், ஓசை ஓலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ? என்பது மத நூற்றுணிவாகும்.
எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும், தந்தையாயும், எல்லாமாயும், எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியா மையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும்; அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது.
கடற்சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும்.
கடவுள் மறைந்து இருப்பவர் அல்ல
ஆனால், நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற் சிப்பி முத்துபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்பவருமன்று.
ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், இன்ன தன்மையோடு இருக்கிறதென்று அறியுந் தன்மையில் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்க வேண்டும். அங்ஙனமின்றி, எல்லாமாய், எங்குமாய் அணுவுக் கணுவாய், அகண்டமாய், எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை.
ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ, அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும்.
ஆனால், கடவுள் அளப்பரும் இயல்பினதாய் - மறைமுதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அறிவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனா வானா? அதன் கவுரவத் தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா?
கண்டதையே உண்டு எனக் கூறல் வேண்டும்
அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப் படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந் தாலன்றி முடியுமா?
ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவா னாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டு மன்றோ!
எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் மதநூலார் கொள்கை. எனவே, காணமுடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது.
அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போல கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூல்கள் இடந்தருவதில்லையே!
கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.
எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்துவிடுமென்றும் கருதும் நிறைமதியாளனும் மணற்சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.
முன்னுக்குப்பின் முரண்
இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர்! என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழிச் சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பியுள்ளனர்.
பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலானோர் அவ்வழிப்போய் மீண்ட பலருள் சிலராவர்.
ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளை தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள் தாங்கள் கருதிப் போன கடவுள் காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்.
எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது.
உண்மையை அறிய மதம் தடை
ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால் பொய்யைப் பொய்யெனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது. இதனால், உண்மைகளை உருவாக்கு வதற்குப் பெரு முயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படுகின்றது. இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண் கூடு.
காரணம், மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறிவு வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலனாக விளங்குவதால் என்க

Read more: http://www.viduthalai.in/home/viduthalai/rationalism/74414-2014-01-31-10-25-51.html#ixzz2tenn5Nym

No comments:

Post a Comment

ThirukKuRaL