தென்றல் (Thendral)

Thursday, February 13, 2014

தாய்க் கழகத்தின் கடமை

ம.தி.மு.க வின் செயல்பாட்டை பற்றி இடித்துச் சொல்லுவது தாய்க் கழகத்தின் கடமையாகும்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு வைகோ அவர்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்வதற்கு எந்தக் காரணத்தையா வது கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய நெருக்கடியில் இருப்பதாகத் தெரிகிறது.

(1) நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்கிறார். வாதத்துக்காக அப்படியே இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஓர் அலை வீசுவதாலேயே அந்த அலையோடு அடித்துக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கூறுகிறாரா? அலையோடு போக வேண்டுமே தவிர எதிர்க்கக் கூடாது என்பதுதான் அவரின் கருத்தா?

(2) நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. தமிழக அரசியல் களத்தில் தி.மு.க., அ.தி.மு.க. என இதுவரை இருந்த பரிமாணம், மோடி அலையால் இம்முறை உடையும், புதிய மாற்றம் துவங்கும் என்று கூறியுள்ளார். உடனே மோடி என்ன பதில் சொன்னாராம்? நானும் அப்படித் தான் எதிர்பார்க்கிறேன் என்றாராம். (தினமலர் 10.2.2014 பக்கம் 3).

ஆக திராவிடர் இயக்கத் தொடர்பான அமைப்புகள் தோற்றுப்போக வேண்டும், இந்துத்துவா கட்சியான பிஜேபி தமிழ்நாட்டில் வேர்ப் பிடிக்க வேண்டும். அதுதான் புதிய பரிமாணம், புதிய மாற்றம் என்பதுதான் மறுமலர்ச்சி திமுகவின் நிலைப்பாடா? அப்படியானால் அவர் கட்சியிலும் இருக்கும் திராவிட என்பது என்னாவது? அதிலும் மாற்றம் வரும் என்று எதிர்ப் பார்க்கலாமா?.

திராவிடர் இயக்கத்தின் அடிப்படையான கொள்கை ஜாதி ஒழிப்பு - பிறவிப் பேத ஒழிப்பு - சமத்துவ நிலை என்பது பிஜேபியின் இந்துத்துவா கொள்கை என்பது வருணாசிரம தர்மத்தைக் காப்பது - ஜாதியைக் கட்டிக் காப்பது (கோல்வாக்கரின் பஞ்ச் ஆஃப் தாட்ஸ் நூலைப் படித்துப் பார்க்கட்டும்).

இந்த நிலையில் திரு. வைகோ என்ன சொல்லுகிறார்? ஜாதி ஒழிப்புக் கொள்கை என்பது சுத்த மோசம்.

பிஜேபி கூறும் வருணாசிரமம் காப்பாற்றப்பட வேண்டியதுதான் என்று சொல்லுகிறாரா? இதுதான் மறு மலர்ச்சியைக் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டுள்ள ஒரு திராவிடக் கட்சியின் கொள்கைக் கோட்பாடா?

இதே வைகோ அவர்கள் இந்த இந்துத்துவா கூட்டத்தைப் பற்றி என்ன கூறினார்?

பாபர் மசூதியை இடித்து, தகர்த்துத் தரைமட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச் சார்பின்மைமீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலாகும்; பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங்பரிவார் எனும் மத வெறிக் கூடாரத்தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளிகள் என்று எல்.கே. அத்வானியையும், முரளி மனோகர் ஜோஷியையும் குற்றஞ் சாட்டுகிறேன். பாபர் மசூதியின் மூன்று விதானங் களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடி களின் மெலிந்த தேகத்தின்மீது பாய்ந்த மூன்று தோட்டாக் களின் ஓசையை நினைவூட்டியது (தினகரன் 25.12.1992). என்று பேசினாரா இல்லையா?

இந்த மத வெறிக்கும்பல் நன்னெறி திருக்கூட்டமாக எப்பொழுது மாறியது? வைகோ, மோடிக்குச் சால்வை போர்த்தியவுடன் இந்துத்துவா கூடாரத்தின் கொள்கையும், கோட்பாடும் நிறம்மாறி விட்டனவா? பெரியார், அண்ணா கொள்கைகளை இதோ இக்கணமே ஏற்றுக் கொண்டோம் என்று கூறி விட்டார்களா?

1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மாறிமாறி வரும் திராவிட இயக்கப் பரிணாமத்தை உடைக்க இந்துத்து வாவை, வைகோ அவர்கள் அழைத்ததும் - அதற்கு தானும் அப்படிதான் எதிர்ப்பார்ப்பதாக மோடி கூறியதும் - என்றென்றும் வைகோ அவர்களைத் துரத்தி கொண்டே தான் இருக்கும் என்பதில் அய்யமே இல்லை.

3) வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் கடைப்பிடித்த அணுகு முறையையே நீங்கள் அமைக்கப் போகிற அரசும் பின்பற்ற வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் வைக்க நரேந்திரமோடி அப்படியே செய்வோம் - என்று கூறியதாக வைகோ அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இது உண்மையா? இலங்கைப் பிரச்சினையாக இருந் தாலும் சரி, வேறு வெளியுறவுப் பிரச்சினையாக இருந் தாலும் சரி, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் கொள்கை அளவில் வேறுபாடு கிடையாதே! ஈழத்தை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இதே வாஜ்பாய் (8.5.2000) சொல்லவில்லையா?

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் மாநிலங்களவையில் அதிகார பூர்வமாக என்ன பேசினார்?

இலங்கையில் நிகழ்ந்து வரும் மாற்றம் எங்களுக்கு வருத்தம் தருவதாக இருக்கின்றது. நாங்கள் இலங்கை யோடு தொடர்பில்தான் இருக்கிறோம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் அமைதியான வழியில் தீர்வையெட்ட இந்திய அரசு முயற்சியை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கவில்லையா? (4.5.200).

இதுதானே காங்கிரசின் நிலைப்பாடும்! வாஜ்பேயி அமைச்சராவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்தானே இப்படிப் பேசினார். வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு ஏதோ நல்லது செய்து விட்டதுபோல பேசலாமா வைகோ அவர்கள்?

திரு வைகோ அவர்களுக்கு இதெல்லாம் நல்லதல்ல; இப்பொழுதுகூட கெட்டுப் போய் விடவில்லை. பிஜேபி உறவைத் துண்டித்துக் கொள்வது நல்லது; இல்லையெனில் இந்தப் பழி, காலா காலத்திற்கும் விரட்டிக் கொண்டே இருக்கும் என்று இடித்துச் சொல்லுவது தாய்க் கழகத்தின் கடமையாகும்.

‪#‎நன்றி‬: விடுதலை தலையங்கம், 13-02-2014

No comments:

Post a Comment

ThirukKuRaL