தென்றல் (Thendral)

Thursday, February 13, 2014

ஓடாதே நில் நில்..கேட்ட கேள்விக்கென்ன பதில்?


By Karunanidhi Govindarajalu: கேள்விக்கென்ன பதில்?

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி எல்லோரையும் கேள்வி கேட்கிறார். ஆனால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தராமல் இருப்பது சாமர்த்தியம் என நினைக்கிறார். யோகேந்திர யாதவ், சமூக இயலாளர்; தற்போது ஒரு அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். சில கேள்விகளை தனது டிவிட்டர் வாயிலாக அவர் மோடியை நோக்கி, 10.2.2014 அன்று தொடுத்துள்ளார்.

1. அதானி குழுமத்திற்கு, மோடி அரசில் நிறைய சலுகைகள் தரப்பட்டுள்ளன. மோடிக்கும், அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு என்ன?

2. தற்போது மோடி மேற்கொள்ளும் கோடிக்கணக்கான ரூபாய் விளம்பர செலவுகளுக்கு யாரிடமிருந்து பணம் பெறப்பட்டது? இது குறித்து பிஜேபியிடம் வெளிப்படையான தன்மை இல்லையே?

3. நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட பாபுலால் பொகாரியா இன்னமும் மோடியின் மந்திரிசபையில் நீடிக்கிறாரே. மோடி எப்படி அரசியலில் குற்றவாளிகள் நுழைவதை தடுப்பேன் எனக் கூற முடியும்.

4. விவசாயிகள் தற்கொலை, குழந்தைகள் இறப்பு விகிதம், பள்ளி கல்வி தரம் இவற்றில் குஜராத் மாநிலம் பின் தங்கியுள்ளதே? இவற்றை களைய, மோடி அரசு செய்த நடவடிக்கைகள் என்ன?

இந்த கேள்விகளுக்கெல்லாம், மோடியிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை.

சிஎன்என் - அய்பிஎன் ஆங்கில ஊடகத்தின் சிறந்த ஊடகவியலாளர் கரன் தாபர், மோடியை 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பேட்டி கண்டார். 2002 குஜராத் கலவரம் தொடர்பாக கேள்வி கேட்டார். குஜராத் கலவரத்திற்கு நீங்கள் தான் காரணம் என சொல்லப்படுகிறதே; அந்த கலவரத்தில் பல்லாயிர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களே; இதற்கு தாங்கள் இப்போதாவது வருத்தம் தெரிவிப்பீர்களா? என்று கேட்டதற்கு, அப்போதே நான் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிட்டு, இதற்கு மேல் உங்கள் பேட்டியில் நான் பங்கெடுக்க விரும்பவில்லை என்று அய்ந்து நிமிடத்திலேயே அரங்கத்திலிருந்து வெளியேறியவர் மோடி.

வரலாற்று செய்திகளையெல்லாம் தவறாக பொதுக்கூட்டத்தில் மோடி கூறியதை சுட்டிக் காட்டியதற்கும், அவரிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை.

தற்போது, அகமதாபாத்தில் தேனீர் கடையினை உருவாக்கி, அதில் வீடியோ கான்பரன்சிங் முறையினை மிகுந்த பொருட் செலவில் உருவாக்கி உள்ளார் மோடி. நாடு முழுவதும் பல இடங்களிலிருந்து அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறலாம் என விளம்பர யுக்தியை புகுத்தியுள்ளார். இந்த முறையில் எந்த ஊரிலும் தேனீர் கடை யாரும் நடத்தவில்லை. மோடி போன்ற கார்ப்பரேட் ஏஜெண்டுகள் தான் இம்மாதிரி கடையை நடத்த முடியும் என்பது வேறு செய்தி.

முதலில் யோகேந்திர யாதவ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும். பிறகு தேனீர் சாப்பிடலாம்.

#நன்றி:Karunanidhi Govindarajalu

No comments:

Post a Comment

ThirukKuRaL