தென்றல் (Thendral)

Wednesday, February 19, 2014

கலைஞர் ஏன் 2000ல் நளினியை மட்டும் காப்பாற்றினார்? -டான் அசோக்




கலைஞர் ஏன் நளினியை மட்டும் 2000ல் தூக்கில் இருந்து காப்பாற்றினார் மற்ற மூவரைக் காப்பாற்றவில்லை எனக் கேள்வி கேட்போர் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே அமைதிப்படையை வரவேற்கச் செல்லாததைக் காரணம் காட்டியும், புலி ஆதரவாளர் என்பதைக் காரணம் காட்டியும் ஜெ-சந்திரசேகர்-சுஸ்வாமி கூட்டணியால் 1989ல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது. அதன்பின் 1991ல் ராஜீவ் கொலைக்காக, ராஜீவ்வின் குடும்பத்தைவிட அதிகமாகத் துடித்தார்கள் தமிழர்கள். அதற்காக ஈழ (புலிகள்) ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்திற்காக திமுகவை 1991ல் ஒரே ஒரு சீட்டில் மட்டுமே ஜெயிக்க வைத்து படுபயங்கரமாக தண்டித்தார்கள் தமிழர்கள். பிறகு ராஜீவ்வின் மரண அலையில் மிதந்தபடி ஜெ ஆட்சிக்கு வருகிறார். வந்தவுடன் முழுமூச்சாக புலிகளை தீவிரவாதிகளாக அறிவிக்கும் செயலிலும், இந்தியாவில் புலி அமைப்பிற்கு தடை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு ஜெயிக்கிறார். தமிழ்மக்கள் கிஞ்சித்தும் கொந்தளிக்கவில்லை.

1996ல் திமுக வெற்றிபெற்ற பின்னரும் கூட தமிழகத்தில் புலி ஆதரவான சூழல் அமையவில்லை. மக்கள் ராஜீவ் கொலையை மன்னிக்கத் தயாராக இல்லை. அதனால் ஜெவின் புலி மற்றும் ஈழ எதிர்ப்பு அதே சூட்டுடன் தொடர்கிறது. தொடர்ந்து ஈழ எதிர்ப்பு வேலைகளைச் செய்கிறார். தற்போது கொந்தளிக்கும் வைகோ, நெடுமாறன், இதர இதர வாதிகள் யாரும் ஜெவை எதிர்க்கவில்லை.

இப்படியொரு சூழ்நிலையில் தான் 2000ல் நளினியின் தூக்கு தண்டனையை கருணையின் அடிப்படையில் ரத்து செய்யவேண்டும் என திமுக அமைச்சரவை பரிந்துரை செய்கிறது. இதில் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

a)திமுக தீவிரவாதிகளை ஆதரிக்கிறது என ஜெ கடுமையாக தாக்கி பல அறிக்கைகள் கொடுத்தார். அந்த அறிக்கையை யாரும் எதிர்க்கவில்லை. தமிழக பொதுமனநிலை புலிகளுக்கு எதிராகத்தான் அப்போது இருந்தது.

b)ஏன் மற்ற மூவரின் தண்டனையைக் குறைக்க பரிந்துரைக்கவில்லை என்ற கேள்வி பொதுச்சூழலில் எழவே இல்லை.

c)ஏற்கனவே புலிகளின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டால் ஆட்சியை இழந்த திமுக மீண்டும் அதே தவறை செய்யத் துணிகிறது. அதாவது பொதுமனநிலைக்கு எதிராக நளினியை தூக்கில் இருந்து காப்பாற்றுகிறது. அந்த காலகட்டத்தில் இது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம். ஆனாலும் திமுக அதை நிறைவேற்றுகிறது.

d) (இதுதான் மிக மிக மிக முக்கியமான விஷயம்) இப்போது உச்சநீதிமன்றம் மூவரையும் நிரபராதிகள் என்ற ரீதியில் தூக்கு தண்டனையை நிறுத்தவில்லை. கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி(கள்) தாமதப்படுத்தியதால் நிறுத்தியிருக்கிறது. ஆனால் 2000ல் அவர்களுக்குத் தண்டனை கிடைத்து 2 ஆண்டுகளே ஆன சூழ்நிலையில், திமுக என்ன காரணத்தைச் சொல்லி அவர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற முடியும்? கருணைக்கு காரணமாக எதைக் காட்ட முடியும்? நளினிக்கு மட்டும் தான் குழந்தை என்ற சரியான காரணம் இருந்தது.  அதனால், ஏன் மற்ற மூவரை 2000ல் கலைஞர் காப்பாற்றவில்லை எனக் கேட்பது பைத்தியக்காரத்தனமான கேள்வி, கலைஞரை குற்றம் சாட்டவேண்டும் என்றே முன்வைக்கப்படும் வன்மமான, லூசுத்தனமான கேள்வி. 

ஆக, கலைஞரை குறை சொல்வதும், வன்மத்தை உமிழ்வதும் வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற ’வாய்மாறி அரசியல்வாதி’களுக்கு பிழைப்பாக இருக்கலாம். ஆனால் நம்மைப் போன்ற சராசரி மக்கள் குறைந்தபட்சம் வரலாற்றையாவது தெரிந்துகொள்ள வேண்டாமா? துவக்க காலத்தில் இருந்தே திமுக மரணதண்டனைக்கு எதிரான கட்சி. கலைஞர் பல சூழ்நிலைகளில் மரண தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார். நளினியை 2000லேயே காப்பாற்றிய அவரை இந்த விஷயத்தில் குறை சொன்னால் அதைவிட மோசமான அரசியல் அறிவின்மை எதுவுமே இருக்க முடியாது. அப்படியும் கோபத்தைக் காட்டியே தீர வேண்டும் என நினைத்தால் நளினி காப்பாற்றப்பட்டபோது வெகுண்டெழுந்த, மூவரையும் காப்பாற்றவேண்டும் என சட்டசபையில் தீர்மானம் போட்டுவிட்டு நீதிமன்றத்தில் பல்டி அடித்த ஜெவிடம் சென்று காட்டுங்கள். ஏனென்றால் பந்து இப்போது அவர் பக்கம் இருக்கிறது!

No comments:

Post a Comment

ThirukKuRaL