தென்றல் (Thendral)

Wednesday, February 12, 2014

பூணூல்(தின)மணியின் எத்து வேலை

தினமணியின் இடஒதுக்கீடு பற்றிய அவதூறு கட்டுரைக்கு விடுதலையின் பதிலடி...ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் மறுநாள் காலையிலேயே ஜாதி ஒழிந்துவிடுமா? தினமணி ஆசிரியரின் பூணூலைக் கழற்றச் செய்யட்டும் பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வும், சலுகைகளும்! எனும் தலைப்பில் தினமணியில் சிறப்புக் கட்டுரை ஒன்று தீட்டப்பட்டுள்ளது (11.2.2014, பக்கம் 8).

தமிழக அரசியல்வாதிகள், ஆந்திராவில் உள்ளது போல ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக 5 சதவிகித மதிப்பெண் சலுகை வழங்கவேண்டும் என அறிக்கை வெளியிடுகின்றனர். ஜாதிகளைத் தாங்கிப் பிடிக்கும் அரசியல்வாதிகள், அதனால் தரமான, நிறை வான கல்வி குறைபட்டுப் போகுமென தெரிந்திருந்தும் வேண்டுமென்றே குரல் கொடுப்பது வேதனையளிப் பதாக உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம் 60 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவர் 59 விழுக்காடு மதிப்பெண் வாங்குபவரைவிட அறிவாளி, தகுதியானவர் என்று கூறுகிறார்களா?

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதுதான் தகுதியின் அளவுகோலா? தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, தங்கப்பதக்கம் பரிசு பெறுவோர்தான் நாட்டில் பிரகாசமாக சாதனைகளைப் பொறித்துக் கொண்டு திரிகிறார்களா?

மதிப்பெண் அடிப்படையில்தான் தகுதி -திறமை நிர்ணயிக்கப்படும் என்றால், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒரு அம்பேத்கர் நமக்குக் கிடைத் திருக்கமாட்டார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இரவீந்திரன் கூறியதை மறுக்கமுடியுமா?

மதிப்பெண் போடுவது குறித்து இதே தினமணியில் (9.12.2013) ஒரு செய்தி வெளிவந்ததே!

பிளஸ்-2 மற்றும் 10 ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதில் கவனக்குறைவாக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை விளக் கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த 5600 மாணவர்களில் 4000 மாணவர்களின் மதிப்பெண் மாறியது என்று செய்தி வெளியிட்ட தினமணியில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்தான், தகுதி - திறமைக்கு அடை யாளம் என்று வாதிடப்படுகிறது.

இதில் இடைக்குத்து - ஜாதியைத் தாங்கிப் பிடிக்கும் அர சியல்வாதிகள் தகுதியைப்பற்றிக் கவலைப்படுவதில்லையாம். சமூகநீதி என்பது அவ்வளவு அலட்சியமாகப் போய்விட்டதா?

இப்படி எழுதுகிறவரோ, கட்டுரை வெளிவந்துள்ள தினமணியோ உண்மையிலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் தானா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்பதால் தான் ஜாதி காப்பாற்றப்படுகிறதா? ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் மறுநாள் காலையிலேயே ஜாதி ஒழிந்துவிடுமா?

தினமணி ஆசிரியரின் பூணூலைக் கழற்றச் செய்யட்டும் பார்க்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதி காப்பாற்றப்படுகிறதே - அதனை நீக்கவேண்டும் என்று தினமணியில் தலை யங்கம்கூட எழுதவேண்டாம் ஒரு சிறப்புக் கட்டுரையை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பிரச்சினையைத் திசை திருப்பி வேறு எங்கோ இழுத்துச் செல்லும் எத்து வேலையை தினமணியின் சிறப்புக் கட்டுரை செய்கிறது.

தாழ்த்தப்பட்டவருக்கும், பிற்படுத்தப்பட்டவருக்கும் தகுதி மதிப்பெண் 60 விழுக்காடு என்பதை மாற்றி 55 விழுக்காடு என்று தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவை யில் அறிவித்தார். அதனை நாம் வரவேற்றோம். அதே நேரத்தில், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தகுதித் தேர்வுக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது என்ன நியாயம் - என்ன நேர்மை?

அதே ஆசிரியர் தகுதித் தேர்வுதானே - அதில் ஏன் பாரபட்சம்? இதனை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? அதைப்பற்றி தினமணியின் சிறப்புக் கட்டுரை மூச்சு விடாமல் வழவழா கொழ கொழா என்று முக்கால் பக்கம் கட்டுரை எழுதுவது ஏன்?

பிளஸ்-2 படித்து அதற்குமேல் ஆசிரியர் பயிற்சி இரண்டாண்டு படித்து பட்டயம் பெற்ற பிறகு, மறுபடியும் ஒரு தகுதித் தேர்வு என்பது போக்கிரித்தனம் அல்லவா!

ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றதற்கான பட்டயம் அளித்து - ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர் என்று சான்று வழங்கிய நிலையில், மறுபடியும் தேர்வு என்றால், அரசு, தான் நடத்திய தேர்வையே, தான் வழங்கிய சான்றிதழையே, தானே கொச்சைப்படுத்துவது ஆகாதா?

இந்தத் திசையில் தினமணிகள் ஏன் சிந்திப்பது இல்லை? கல்வி, வேலை வாய்ப்பு என்றால், அதில் எந்த வகையிலாவது சமூகநீதியை, இட ஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்துவது - குறுக்குச்சால் ஓட்டுவதுதான் பூணூல்களின் வேலை.

அதைத்தான் இப்பொழுதும் தினமணி செய்திருக்கிறது.

‪#‎நன்றி‬: விடுதலை தலையங்கம்,12-02-2014

No comments:

Post a Comment

ThirukKuRaL