தென்றல் (Thendral)

Wednesday, February 12, 2014

பாமரன்....தினமலருக்குப் பதிலடி...


சக மனிதனை தொட்டால் தீட்டு என, சொன்னவர்களும்; செருப்புப் போட்டு கீழ் ஜாதிக்காரன் நடக்கக் கூடாது என, சொன்னவர்களும்; ஆத்திகரா, நாத்திகரா? அனைவருக்கும் பொதுவானவர் கடவுள்' எனக் கூறிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களை, கோவிலுக்குள் விடாமல் தடுத்தவர்கள், ஆத்திகரா, நாத்திகரா? கோவிலுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையப் போராட்டம் நடத்தியவர்கள் ஆத்திகரா, நாத்திகரா? இதிகாசம், புராணங்களை மட்டும் வைத்துக் கொண்டுள்ள தமிழை, காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ரா. பெரியார் அவர்தான் கணினியில் தமிழைப் பயன்படுத்தும் அளவுக்கு எழுத்து சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்.

வைக்கம் போராட்டத்தை நிறுத்தி விடுங்கள் என, ஈ.வெ.ரா., பெரியாருக்கு கடிதம் எழுதியவர் காந்தியடிகள். ஆனால், அதை ஏற்காமல் போராட்டத்தைத் தொடர்ந்து, வெற்றி கண்டார் ஈ.வெ.ரா. பெரியார், 'வைக்கம்' போராட்ட வரலாறு அறிந்தவர்களுக்கு தான், இது தெரியும். நாட்டில் உள்ள அனைத்து ஜாதிகளுக்கும் இடஒதுக்கீடு இருந்தது. ஆனால், சண்பகம் துரைசாமி என்ற பார்ப்பான், தன் மகளுக்கு அனைத்து தகுதியும் இருந்தும், மருத்துவக் கல்வி சேர்க்கை கிடைக்கவில்லை என, பொய்யான வழக்கை, தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மூலம் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன்பின், ஈ.வெ.ரா., நடத்திய போராட்டத்தின் விளைவாகத்தான், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டு, இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீடு என்பது, செயினை பறித்துச் செல்லும், திருடனிடம் அதை மீட்பது போன்றது.

குறிப்பிட்ட சமூகங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் பல ஆண்டுகாலம் மறுக்கப்பட்டதால், அவர்களையும், பிற சமூகத்தினரைப் போல, சமத்துவப்படுத்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், சமூகநீதியை நிலைநாட்டி, சமூகங்களுக்கு இடையே உள்ள இழிவைப் போக்குவதே நோக்கம். இதைத் தான் ஈ.வெ.ரா. பெரியார் செய்தார்.

பாமரன், எழுத்தாளர்
(தினமலர், 5.2.2014, பக். 4)

No comments:

Post a Comment

ThirukKuRaL