தென்றல் (Thendral)

Wednesday, February 5, 2014

தமிழில் ஆரியம் புகுந்ததால்.....

நம்மிடையேயுள்ள சாதிப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுவோம். "ஜாதி' என்ற வடமொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்துவிட்டால், அதற்குச் சரியான தமிழ்ச்சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தை இல்லையே! ஆதலால், நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும், இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதிபேத உணர்ச்சி அற்றுப்போகுமா, இல்லையா? கூறுங்களேன்.

இதேபோல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம்; சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள் வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள்.
தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழிக் கலப்பால் இடது கைபோல் பிற்படுத்தப்பட்டுவிட்டது. இந்நிலைக்கு முக்கிய காரணம், மதச் சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழ், சைவமொழி ஆக்கப்பட்டதால்தான் சைவத்திற்காக வேண்டி வடமொழியும், வடமொழிக் கலைகளும் அதிகமாக தமிழ் நாட்டில் புகத் தொடங்கின.

தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் இன்று, ஒரு நியூட்டன் தோன்றமுடியவில்லை; ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்க வேண்டும். தமிழைப் புதுமொழியாக்க, சகல முயற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது மேன்மைக்கும், அந்தஸ்துக்கும் ஏற்றதும் நம் சுதந்திர உணர்ச்சியைத் தூண்டக்கூடியதும், நம் இழிவைப் போக்கக் கூடியதுமான எம்மொழியிலிருந்தும் நம் மொழிக்கு ஆக்கம் தரக்கூடியதும், அவசியமானதும் ஆகிய சொற்களை எடுத்துக் கொள்ளலாம். எம்மொழித் தொடர்பிருந்தாலும் பரவாயில்லை. நமக்கு வடமொழித் தொடர்பு மட்டும் கூடவே கூடாது. தமிழ் ஒன்றுதான் இன்றுவரைக்கும் வடமொழிக் கலப்பை ஓரளவுக்காவது எதிர்த்து வந்திருக்கிறது. வேற்றுமொழிக் கலப்பின்றித் தனித்துச் சிறப்புடன் வாழக்கூடிய தன்மையைத் தமிழ் பெற்றிருக்கிறதென்று மேனாட்டு மொழி வல்லுனர்களே எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

- பெரியார் .'மொழி - எழுத்து' நூலிலிருந்து

No comments:

Post a Comment

ThirukKuRaL