தென்றல் (Thendral)

Saturday, February 1, 2014

குஜராத் - மின்மிகை மாநிலம் - பின்னணியும் பின்விளைவும் (Long Read)


முதலில் மின்சார விநியோகமென்பது இரண்டு வகையாய் பிரிக்கப்படுகிறது. HT & LT. High Tension Power - 440 வோல்ட்ஸுக்கு மேலான பவர். இது தொழிற்சாலை, கனரக இயந்திரங்கள் இயக்கப் பயன்படுகிறது. நம் வீடுகளுக்கு வரும் மின்சாரம் Low Tension Power. LT - 220 வோல்ட்ஸுக்கு இணையானது. எல்.டியில் இயந்திரங்களை இயக்க முடியாது. எச்.டி யில் டிவி, ப்ரிட்ஜ் தீபாவளி பட்டாசாய் பொறியும். உருவாக்கப்படும் மின்சாரம் எல்.டியாகவோ, எச்.டியாகவோ மாற்றப்படுவது ட்ரான்ஸ்பார்மர் இடத்தில். அங்கிருந்து மின்கம்பங்கள், சின்ன ட்ரான்ஸ்பார்மர்கள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இது தான் மின்சாரத்திற்கான ப்ரைமர்.

மோடி முதல்வராகப் பொறுப்பேற்றப் பிறகு செய்த முதல் காரியம் - விவசாயத்திற்கான மின்சார அளவீடை கணக்கெடுத்தது. நாள் முழுவதும் இலவச மின்சாரம் கொடுத்தாலும் விவசாயி பயன்படுத்துவது என்னமோ, நீர் இறைக்க இன்ன பிற சில்லரை வேலைகள் செய்ய தான். முழு நாளும் மின்சாரத்தின் பயன்பாடு வீடுகளுக்கு மட்டுமே இருக்கிறது. வயல்வெளிகளுக்கு இல்லை. இங்கிருந்து ஆரம்பித்தது லீலை. முதலில் விவசாயிகளுக்கு உத்தரவு போனது. இனிமேல் நள்ளிரவில் தான் வயல்வெளிக்கான மின்சாரம் தரப்படும். நள்ளிரவில் நீர் ஏற்றுதல், பாய்ச்சுதல் எல்லாவற்றையும் செய்து கொள்ளுங்கள். பகலில் இதற்கான எச்.டி மின்சாரம் வழங்கப்படாது. இதை சாக்காக வைத்து உலக வங்கி, ஆசிய முன்னேற்ற வங்கிகளில் கடன் வாங்கி விவசாயத்திற்கென்று தனியாக பீடர் (feeder) லைன்கள் போடப்பட்டது. இந்தியாவில் விவசாயத்திற்கென்றே பீடர் லைன்கள் இருக்கின்ற ஒரே மாநிலம் குஜராத் தான்.

Sounds efficient, where is the problem ?

இந்தியாவின் மின்சாரத்தின் முக்கிய அமைப்பான Central Energy Agency (CEA) இதை முட்டாள்தனம் என்கிறது. எச்.டி லைன் போட ஒரு கி.மீக்கு ஐந்திலிருந்து ஆறு லட்சமும், எல்.டி லைன் போட மூன்றிலிருந்து நான்கு இலட்சமும் செலவாகும். இதில் திருட்டுகளும் அதிகம். இதை பராமரிப்பது தலைவலி. தமிழகமும், ஆந்திராவும் போன ஐந்து வருடத்தில் நாங்களும் களத்தில் குதிக்கிறோம், தனி பீடர் லைன்கள் போடுகிறோம் என்று மத்திய அரசை அணுகி 1,500 கோடிகள் கேட்டார்கள் நிதியமைச்சகம் மறுத்துவிட்டது. ஏனெனில் டெக்னிகல் அலசல்களில் இது ஒரு வேண்டாத செலவு என்று காரணங்களோடு விளக்கி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடாதல்லவா. மேலே சொன்ன கணக்கெடுப்பு தான் மோடியை மாற்றியது. கணக்கெடுத்தப் பிறகு மோடியின் உள்ளேயிருந்த குஜராத்தி வியாபாரி தெளிவாக விழித்துக் கொண்டார். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் ஏதோ ஒரு வகையில் மின்சார குறைபாடு உள்ளவர்கள் தான். இந்த குறைப்பாட்டினை சமன் செய்ய, குறைக்க தேசிய மின்சார க்ரிட்லிருந்து (National Power Grid) மின்சாரத்தை வாங்கிக் கொள்வார்கள். மோடி ஒரு குஜ்ஜு வியாபாரி. கணக்குப் போட்டுப் பார்த்தார். காலையில் இந்தியாவே வேலை செய்யும். மின்சார பயன்பாடு அதிகம். இரவில் பயன்பாடு குறைவு. ஆக காலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தேசிய மின்சார க்ரிட்டுக்கு குஜராத் அரசு விற்க ஆரம்பித்தது. ஏனெனில் லாபம் அதிகம். இரவில் பயன்படுத்தாத மின்சாரம் குறைவான விலைக்கு கிடைத்தது. ஆக அதிக விலைக்கு விற்று குறைந்த விலைக்கு வாங்கி efficiency-யை மேம்படுத்தலாம் என்கிற குன்சான திட்டம்.

மின்சார உற்பத்தியில் இருக்கக்கூடிய பெரும் சிக்கல், அதை தேக்கி வைக்க முடியாது. You can't store & regain the generated electricity. விளைவு அரசே மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கிறது என்று தெரிந்தவுடன், ஊரில் இருக்கக்கூடிய எல்லா நிறுவனங்களும் மின் தயாரிப்பில் இறங்க ஆரம்பித்தன. அதானி குழுமத்திற்கு வாரி வாரி சலுகைகளை இறைத்தார். அரை தசாம்சத்தில் தனியார் துறைமுகங்களில் ஆரம்பித்து உலகின் எல்லா அதிமுதலீடுகள் தேவைப்படும் அத்தனையும் குஜராத்திற்கு இடம் பெயர்ந்தன. ஏனெனில் அரசே தனியார் நிறுவனம் மாதிரி செயல் பட ஆரம்பித்தது தான் காரணம்.

தீபாவளி சமயத்தில், தீபாவளிக்கு முன்பாக எல்லா பட்டாசு கடைகளும் விலையை அதிகமாக சொல்லுவார்கள். தீபாவளி முடிந்த மூன்றாம் நாள் அதே பட்டாசு நாதியற்று கேட்கிற விலையில் கிடைக்கும். இந்தியாவில் மின்சாரமும் அப்படி தான். காலையில் ஆளாளுக்கு போட்டிப் போட்டு வாங்குவார்கள். விலையதிகம். இரவில் குப்புறப்படுத்து தூங்கும்போது வர்ற வரைக்கும் லாபம் என்பது தான் ரேட்டு. குஜராத்தி மூளை வியாபார மூளை. எதை எப்போது எந்த சந்தர்ப்பத்தில் விற்றால் அதிக லாபம் பெறலாம் என்பதை ரத்த நாளங்களில் சேமித்து வைத்திருக்கக் கூடிய ஜெனடிக்கல் பிறவிகள்

சிறிய நிலம் வைத்திருக்கிறாயா, விவசாயத்தை விட்டு வெளியேறு. நமக்கு உணவுப் பொருட்கள் வேண்டுமானால் மகாராஷ்டிராவிலிருந்து இறக்கிக் கொள்வோம். இதை சொல்லாமல், ஆனால் அரசு இயந்திரம் நிறைவேற்ற ஆரம்பித்தது. கடந்த பத்து வருடங்களில் குஜராத்தின் விளைநிலங்களின் பரப்பளவை கணக்கெடுத்தால் இது தெரியும். கொஞ்சம் கொஞ்சமாய் self sustainability போய், price arbitrage உள்ளே நுழைய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே குஜராத்தின் மின்சார கட்டணம் அதிகம். அதற்கு காரணம் இது தான். தனியார் முதலாளிகள் அரசுக்கு விற்றது போக, Captive power selling ஆரம்பித்தார்கள். மின்சார விலை அதிகமாக இருந்தாலும், ஒரளவுக்கு தடையில்லாமல் கிடைத்ததால் நிறுவனங்கள் குஜராத் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள். இதில் மோடி அரசின் வெப்ரெண்ட் குஜராத்தின் அட்டகாசங்கள் வேறு.

நிலக்கரியும், அலைகற்றையும் மட்டும் பொது சொத்தல்ல. நிலமும் கூட தான். முன்னிரண்டில் நடக்கும் கலவரமே குறைவான விலைக்கு அதை விற்றது. ஆனால் 5,000 கோடி முதலீடு என்கிற பவர்பாயிண்ட் பிரசண்டேஷனோடு போனீர்களேயானால், ஏக்கர் நிலம் 1000 ரூபாய்க்கு நீண்ட கால குத்தகைக்கு சர்வ சாதாரணமாக குஜராத்தில் கிடைக்கும். அகமதாபாத், பரோடா என விரிவடைந்து கொஞ்சம் கொஞ்சமாய் விவசாயிகளை விரட்ட ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாடு தொழில்துறை மாநிலமாக இருக்கிறதென்றால், இங்கே தண்ணீர் கிடையாது. 80களில் காயந்துப் போய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சபர்மதி ஆற்றில் இன்றைக்கு நீர் இருக்கிறதென்றால் அதற்கு நர்மதா அணை ஒரு முக்கியமான காரணம். நர்மதா அணையின் உயரத்தினை ஒரு அடி உயர்த்தினால், எத்தனை குடிமகன்கள் பாதிக்கப்படுவார்கள், எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும், எவ்வளவு கோடிகள் தரவேண்டும், அதில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பது அத்தனையும் குஜராத்தின் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் தலைகீழ் பாடம். ஆக இங்கேயும் கூத்து நடந்ததால் தான் மேதா பட்கர் முதற்கொண்டு ஆயிரத்தெட்டு தன்னார்வல நிறுவனங்கள் குஜராத்தில் பெருக ஆரம்பித்தன. சமூக சிக்கல்கள் இல்லாத ஊராய் கற்பிதம் பண்ணும் ஒரு மாநிலத்தில் இத்தனை தன்னார்வல நிறுவனங்களுக்கு என்ன வேலை ?

இந்த நிறுவனமயமாக்கலில் இன்னொன்றும் நடந்தது. பெரு நிறுவனங்கள் மின்சாரம் தாராளமாக கிடைக்கிறது என்கிற காரணத்தால் முழுக்க முழுக்க automate செய்யப்பட்ட விஷயங்களை உள்ளேக் கொண்டு வந்தார்கள். பலன்: வேலை வாய்ப்பு, முதலீடு அளவிற்கு சரி விகிதமாய் ஏறவில்லை. உ.தா டி. சி. எஸ் கிட்டத்திட்ட 2 இலட்சம் பணியாளர்களைக் கொண்டிருக்கிறது. அவர்களின் வருடாந்திர வருவாய் சற்றேறக்குறைய $15பில்லியன்கள். ஜாம் நகரில் முகேஷ் அம்பானியால் முழுக்க முழுக்க மெஷின்மயமாக்கப்பட்டிருக்கின்ற ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை வெறும் 25,000. (2,500 என்று விக்கி சொல்கிறது. நேரடி / மறைமுக வேலைவாய்ப்பு என்பதை 25,000 என்று கொள்ளலாம்) வருவாய் $100 பில்லியன்களை தாண்டலாம். அதுவும் ஒரு பைசா உள்ளூர் மக்களுக்கு வராது. ஏனெனில் ஜாம்நகர் ஏற்றுமதி கேந்திரம். பில்லியன் கணக்காய் சம்பாதிப்பது முகேஷ் அம்பானி குடும்பத்திற்கும் + ஷேர் ஹோல்டர்களுக்கும். இது தான் மோடி முன்வைக்கும் “வளர்ச்சி”. Crony Capitalism என்று உலகமெங்கும் உச்சரிக்கபடும் சொல்லின் உள்ளூர் உதாரணம். இதை தான் மோடியின் developmental plan என்பது ஒரு டூபாக்கூர் மாடல் என்பதை இரண்டொரு நிலைத்தகவல்களில் முன் வைத்திருந்தேன்.

18,000 கிராமங்களுக்கு மின்சாரம் போயிருக்கிறது என்று மோடி ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். கொஞ்சம் ஆழ்ந்து நோண்டினால், இதில் கிட்டத்திட்ட 17,000 கிராமங்களுக்கு கேஷுபாய் படேல் காலத்திலேயே இணைப்புக் கொடுத்தாகிவிட்டது. பத்தாண்டு காலத்தில் மோடி நியாயமாய் செய்தது 1,000 கிராமங்களுக்கு இதை நீட்டித்ததே. கையாலாகாத முதல்வர் என்று சொல்லப்படும் ஆந்திராவின் கிரண் குமார் ரெட்டி இதை விட அதிகமாய் சாதித்து இருக்கிறார்.

24 x 7 மின்சாரம் என்று மீடியா மாயாஜாலம் செய்யும் மோடி, ஏன் அகமதாபாத்தில் வியாழக்கிழமை தோறும் Power Holiday வைத்திருக்கிறார் ? வியாழன்னன்று தொழிற்பேட்டையில் இருக்கும் இயந்திரங்கள் வேலை செய்யாது. எச்.டி. மின்சாரம் வராது. இதே போல வதோதரா, பரோடா, சூரத், கச் என நீளும் மாவட்டங்களில் வாரத்தில் ஒரு நாள் இது இன்று வரை நடக்கிறது. மோடி ‘ஆசிர்வாதம்’ வழங்கிய அதானி குழுமத்தின் மொத்த கடன் 55,000 கோடிகளுக்கு மேல. வட்டி மட்டுமே 3500 கோடிகள். கட்டமைப்பினை தலைகீழாக புரட்டிப் போடுகிறேன் பேர்வழி என்று சொன்ன அரசின் கீழ் வந்த தனியார் நிறுவனங்களின் இலட்சணம் இது தான். ஆக 24 x 7 மின்சாரம் என்பது வசீகரமான பொய். இது குஜராத்தில் நிகழவில்லை. நிகழ்ந்ததாக பறை சாற்றுவது அபத்தம். 2011 சென்சஸ் டேட்டா இன்னும் ஒரு படி மேலே போய் நகரம் மற்றும் கிராமங்களில் இன்னமும் லைன் கூட இழுக்கப்படாத வீடுகள் என்று பெரிய எண்களை சொல்கிறது. இது தான் நிதர்சனம்.

பத்து வருடங்களில் எதுவுமே நடக்கவில்லையா ?

கண்டிப்பாக நடந்திருக்கிறது. மோடி எதுவுமே செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால், மோடி முன்வைக்கின்ற அளவுக்கு “எதுவுமே” நடக்கவில்லை. கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தகளில் 10-13% குறைவான ஒப்பந்தங்களே implementation நிலைக்கு போயிருக்கிறது (இந்திய சராசரி 9 -11%) விவசாயப் போராட்டங்கள் மாநிலங்கள் முழுக்க அதிகமாகி இருக்கின்றன. நீங்கள் கூகிளிட்டு தேடினால் இது எதுவுமே கிடைக்காது. ஏனெனில், சர்வாதிகார அரசுகள் ஊடகங்களை அடக்கி வைத்துப் போல, மோடிக்கு பின்னிருக்கும் Friends of BJP கும்பல், இணைய சாதுர்யத்தில் சமர்த்தர்கள். கூகிளின் அல்காரித்ததில் எதைக் கொடுத்தால் எப்படி லிஸ்டாகும் என்பதை தண்ணீர் பட்ட பாடாய் தெரிந்து வைத்திருப்பவர்கள். குஜராத் கலவரத்தை எப்படி கூகிளில் தேடுவீர்கள். “gujarat riots" என்று தானே. ஆனால் கூகிளில் வரும் ’குஜராத் ராயாட்ஸ்.காம்மிற்கு’ போனீர்களேயானால் (அது தான் முதலில் வரும்) மோடி குற்றமற்றவர், அது கலவரமே இல்லை அது ஒரு retaliation, 2000 முஸ்லீம்கள் சாகவேயில்லை என்கிற அளவிற்கு மூளை சலவை செய்வார்கள். இது தான் மோடியின் நிஜமான வெற்றி. ஆழமாய் யோசிக்க தெரியாத, யோசிப்பதை தவிர்க்கின்ற பொதுஜனம் இண்டர்நெட்லயே சொல்டான்பா என்று மோடி வந்தால் நாட்டுக்கு நல்லது என்கிற கோஷத்தை முன்னெடுப்பார்கள்.

மின்சார தயாரிப்பு என்பது அதிகமாகி, நிறுவனங்கள் ஆட்டோமேட் செய்து, உள்ளூர் வேலை வாய்ப்பினைக் குறைத்து, விவசாயத்தை நாசம் செய்து, சிறு விவசாயிகளை விரட்டி, உள்ளூரில் பெருநிறுவனங்கள் தவிர்த்து யாருமே பிழைக்க இயலாத சூழலை உருவாக்கி தான் இந்த ‘வளர்ச்சி’ சாத்தியமாகி இருக்கிறது. இதை முதலில் ‘வளர்ச்சி’ என்று ஒத்துக் கொள்ள முடியுமா ?

ஏன் குஜராத்திலிருந்து ஒரு மென்பொருள் நிறுவனம் கூட வரவில்லை ?
ஏன் குஜராத்தின் லோக்கல் ப்ராண்ட் என்று ஒன்றையும் நம்மால் சொல்லிக் கொள்ள முடியவில்லை ? (அமுல் விதிவிலக்கு - அதுவும் குரியன் இருந்தவரை. இப்போது போர்ட் ரூம் சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது)
குஜராத்தில் இவ்வளவு வளமிருக்கும்போது ஏன் குஜராத்திகள் ஆப்ரிக்காவிலும், லண்டனிலும், கனடாவிலும் போய் செட்டிலாகிறார்கள் ?
இத்தனை சிறப்பான ஆட்சி அமைந்திருக்கும்போது ஏன் CAG குஜராத் அரசை காறித்துப்புகிறது ?
இவ்வளவு முதலீடுகள் இருக்கும்போது ஏன் அரசின் கடன் உயர்ந்துக் கொண்டேப் போகிறது ?
ஏன் எல்லா சமூக அளவீடுகளிலும் (கல்வி, சுகாதாரம், மருத்துவம்) குஜராத் டாப் 5 இந்திய வரிசையில் இல்லை ?

எல்லாவற்றுக்குமான ஒரே பதில். மோடி நம்புவது ஒன்றினை தான். பொருளாதார பெருக்கம் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்பதை தான். இதை தான் வளர்ச்சியாக அவர் முன் வைக்கிறார். His stanch belief is that Money can solve all the world's problem. அது ஒரு வேளை உண்மையெனில் அமெரிக்கா உலகத்திலேயே சுபிட்சமான சொர்க்கமாக இருந்திருக்க வேண்டும். இத்தனை வேலைவாய்ப்பின்மை ஏன் ? இத்தனை ஏற்றத்தாழ்வுகள் ஏன் ? ஏன் Occupy Wall Street நடக்கிறது ? அமெரிக்க கேப்பிடலிஸம் ஒரு அபத்தம் என்பதை அமெரிக்காவின் 1% பெருந்தனவந்தர்கள் கூட லேசாக ஒத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ஒற்றை அதிகாரமும், மிதமிஞ்சிய போதையும் தளும்பும் மோடியிடத்தில் அந்த புரிதலை எதிர்பார்ப்பது கடினம்.

இந்த ‘வளர்ச்சியை’ தான் நாடு முழுக்க பரவலாக்க மோடியின் ஆதரவாளர்கள் கெஞ்சுகிறார்கள். இந்த மின்சார உற்பத்தி அதன் பின் விளைவுகள், உள்ளூர் பொருளாதாரம் எப்படி நாசமாய் போனது என்பதுப் பற்றி யாருக்கும் கவலையில்லை. ஏனென்றால் மீடியாவுக்கு தேவை ஒரு பாஸிடிவ் செய்தி; ஊடகங்களுக்கு தேவை கொஞ்சம் எண்கள்; மக்களுக்கு தேவை ‘அவரு வந்தா நிலமை மாறிடும்’ என்கிற போதை.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மூதோர் வாக்கு. மின்சாரம் தயாரிப்பதனாலேயே ஒரு மாநிலம் எல்லாவற்றையும் வென்று விட்டது என்பது முட்டாள்தனம். There is always an equal & opposite reaction to Every action. இந்த பபிள் வெடித்து சிதறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
5L

No comments:

Post a Comment

ThirukKuRaL