தென்றல் (Thendral)

Monday, January 27, 2014

27.1.1965 துப்பாக்கிச் சூ டு

துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன்
'மொழிப் போர் ஈகி' இராசேந்திரன் நினைவு நாள்

27.1.1965

இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தீக்குளித்த இளைஞர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய பக்தவச்சலம் அரசின் காவல் துறையை கண்டித்தும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் சனவரி 26 அன்று பேரணி நடத்த முயன்றனர். அன்று குடியரசு நாள் என்பதால் அனுமதி மறுத்த காவல் துறையினர் மறுநாள் அனுமதி தருவதாக உறுதியளித்தனர். மாணவர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர்.

மறுநாள் காலையில் 4000 மாணவர்கள் ஒன்று கூடி "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!" என்று முழக்கம் எழுப்பிய படி பேரணியை த் தொடங்கினர். நகர எல்லையில் குவிக்கப்பட்ட காவல் துறையினர் தடையாணை இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று பேரணியை மறித்து நின்றனர். காவல் துறைக்கும் மாணவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த காவல் துறை குண்டாந்தடியை பயன்படுத்தி மாணவர்களை விரட்டி விரட்டி அடித்தது. போர்க்குணம் கொண்ட மாணவர் பட்டாளமோ அங்கு கொட்டப்பட்டுக் கிடந்த கற்களை எறிந்து பதிலடி தந்தனர்.

கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைய மறுத்தது மாணவர் பட்டாளம். வெறி கொண்ட காவல்படையோ மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கியது. அதில், இராசேந்திரன், நெடுமாறன் உள்பட மேலும் இரண்டு மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். தோளில் குண்டடிபட்ட நெடுமாறன் இரத்தம் சொட்ட சொட்ட ஓடினார். துப்பாக்கி குண்டால் துளைக்கப்பட்ட இராசேந்திரன் மட்டும் தரையிலே வீழ்ந்து கிடந்தான்.

அப்போது அவன் உடலில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு சில மாணவர்கள் காப்பாற்றுவதற்காக ஒரு கம்பில் வெள்ளைத் துணியைச் சுற்றி உயர்த்தியபடி முன்னே வந்தனர். அப்போது காவலர்கள் அருகே வந்தால் சுட்டு விடுவேன் என்று மிரட்டவே, வந்தவர்களும் ஒதுங்கி நிற்க வேண்டியதாயிற்று. அப்போது எந்த காவலருக்கும் இராசேந்திரனை மருத்துவமனைக்கு தூக்கி சென்று உயிரை காப்பாற்ற மனம் வரவில்லை. எல்லா மாணவர்களும் கண் கலங்கி நிற்க மாணவக்கண்மணி இராசேந்திரன் துடிதுடித்துச் செத்தான்.

1938 முதல் நடைபெற்று வரும் இந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கிச் சூட்டில் பலியான முதல் மாணவன் இராசேந்திரன் ஆவான். பி.எஸ்.சி. படித்து வந்த இராசேந்திரன் வயது 18. சிவகெங்கையைச் சேர்ந்த இவரின் தந்தையாரும் ஒரு காவலர் தான். நிகழ்ச்சி நடந்த அன்று சிவகாசி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்புப்பணிக்கு சென்றிருக்கிறார். இராசேந்திரன் படிப்பில் திறமையானவர். இவர் சாவதற்கு முன் நடைபெற்ற கணிதத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவருக்கிருந்த தமிழ்ப்பற்றின் காரணமாக முதலில் மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் விண்ணப்பம் செய்தார். அங்கு இடம் கிடைக்காததால் அண்ணாமலையில் சேர்ந்தார். மீட்கப்பட்ட இராசேந்திரனின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. இராசேந்திரனின் ஈகத்தை வருங்கால மாணவர் சமூகம் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது திருவுருவச் சிலை அண்ணாமலைப் பல்கலைக் கழக வாயிலில் நிறுவப் பட்டுள்ளது.

இராசேந்திரன் மறைந்த இந்நாளில் அவன் தொடங்கி வைத்த 'தமிழ்மொழி மீட்பு' போரை தொடர்ந்து நடத்த மாணவர் சமூகம் உறுதியேற்கும் படி வேண்டிக் கொள்கிறோம்!

No comments:

Post a Comment

ThirukKuRaL