தென்றல் (Thendral)

Wednesday, January 8, 2014

நீங்களே சிந்தியுங்கள்!

 நீங்களே சிந்தியுங்கள்!

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற உடனேயே ஜமீந்தாரி முறையை சட்டம் போட்டு ஒழிக்க முடிந்தது. ஆனால் இத்தனை நாள் ஆகியும் ஆகம, வேத கோவில்களில் பூசை செய்யும் உரிமையை ஒரே சாதியினர் தான் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கோவிலில் தமிழில் பாடினால் தீட்டு எனச் சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு ‘தலைக்கனம்’மும் தெனாவெட்டும் வாய்த்திருக்கிறது.
ஜமீந்தார்களையே அப்படி ஓரமாய்க் கடாசிய அரசும், சட்டமும், நீதிமன்றமும் எப்படி இவர்களை மட்டும் செல்லம் கொஞ்சிக் கொண்டே இருக்கிறது?

1)தமிழ் மன்னர்கள் (அப்போதைய தமிழ் அரசுகள்) கட்டிய சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணிபுரிய வந்தவர்கள் எப்படி அந்தக் கோவிலின் உரிமையாளர்கள்(நிர்வாகிகள்) ஆக முடியும்? இப்போதைய தமிழக அரசு அதை ஏற்று நடத்துவதுதானே நியாயம்? பழைய முதலாளி மறைந்து புதிய முதலாளி வந்து விட்டால் ஊழியனுக்கே நிறுவனம் சொந்தமாகிவிடுமா?

2)நியாயமாக மக்கள்தொகை சதவிதத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு கேட்பதையே மிகப்பெரிய கொலைக் குற்றமாக ஊதிப் பெரிதாக்கும் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும், வளம் கொழிக்கும் கோயில்களில் 100சதவிகித இட ஒதுக்கீட்டுடன் உலா வந்து கொண்டிருக்கும் இவர்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன?

3)‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டிருப்பதை எந்த ஊடகமாவது கண்டித்திருக்கிறதா? ஊழலுக்கு எதிராக போராடும் யோக்கியவான் எவரேனும் இதைக் கண்டித்திருக்கிறார்களா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது ’இந்தியக் குடிமக்கள் அனைவரும் சமம்’ என்ற அடிப்படை உரிமையின் கீழ் வரவில்லையா?

முடிவு: இந்த நாட்டின் அரசில், அரசின் செயல்பாடுகளில், ஊடகங்களில், ஊடகங்களின் நடுநிலையில், சட்டத்தில், சட்டத்தை நிறைவேற்றவேண்டிய நீதிமன்றங்களின் நடுநிலையில் ஒரு அடிப்படை பிரச்சினை இருக்கிறது. அது எது என்று நீங்களே சிந்தியுங்கள்! அந்த அடிப்படைப் பிரச்சினை சரி செய்யப்படும் வரை நீதி என்பது இங்கு ஒரு சாராரையே கதாநாயகனாக வைத்து எழுதப்படும் புனைவு தான்!


நன்றி....டான் அசோக்

No comments:

Post a Comment

ThirukKuRaL