தென்றல் (Thendral)

Wednesday, January 29, 2014

உன் இதயம் துடிக்கவில்லையா?

என் அன்புத் தம்பி
வைகோவுக்கு,
உன் அண்ணன்
ஏழைப்புலவன்
எழுதும் மடல்!
வணக்கம்! வாழிய நலம்!

நீ படிக்காத எதையும் நான் படித்திருக்கவில்லை.
1946&ம் ஆண்டு மே மாதம் 15 & ம் நாள் கோட்சேவைப் புனேவுக்கு வரவழைத்து
இந்துராஷ்ட்ரா பத்திரிகை தொடங்குவதற்காக சாவர்க்கர் பதினைந்தாயிரம்
ரூபாய் கொடுத்தார். அந்த இந்து ராஷ்ட்ராவை இலட்சியமாகக் கொண்டவர் தான்
மோடி.
அதனால் தான் ஊடகங்கள் அத்தனையும் வரிந்து கட்டிக் கொண்டு மோடிக்கு
பட்டாபிஷேகம் நடத்தியே தீருவது என்று புறப்பட்டிருக்கின்றன.
இந்தியாவைக் கலவர பூமியாக்க அயோத்தியில் மசூதியை இடித்த அத்வானியைக் கூட
புறந்தள்ளி விட்டு மோடிக்கு மகுடம் சூட்டத் துடிக்கிறார்களே என்?
விழுந்து கிடக்கும் இந்து ராஷ்ட்ராவைத் தூக்கி நிறுத்தும் இலட்சிய வீரர்
மோடி என்று கருதுகிறார்கள். அந்தக் கருத்தில் பிழையில்லை. அந்த வேலைக்கு
மோடி தகுதியானவர் தான்.
2002 &ம் ஆண்டு;
இராட்டை சுற்றிய அரை நிர்வாணப் பக்கிரி காந்தி பிறந்த மண்ணில் நர
வேட்டையாடிய மகாத்மா, மாமனிதர் மோடி தானே!
மனித நேயத்துக்கு மரண தண்டனை கொடுத்தவர் அந்த மகான் தானே!
2002 &ம் ஆண்டு நடந்த ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னால்
குஜராத்தே கொலைக்களமாக மாறிப் போயிற்றே நினைவில்லையா?
பர்தா போட்டவர்கள் என்கிற காரணத்துக்காகவே பட்டப்பகலில் வெட்ட வெளியில்
வைத்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொன்றொழிக்கப்பட்டார்களே!
நிறைமாதக் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்துச் சிசுவை எடுத்துப்
பெட்ரோல் ஊற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுத் தகனம்
செய்தார்களே! பெஸ்ட் பேக்கரி முற்றிலும் எரிந்து சாம்பலானது போல பலபேர்
சாம்பலாகிப் போனார்களே!
இத்தனை கோரச் சம்பவங்களையும் நாச நர்த்தனத்தையும் கண்டும் காணாமல்
தடுக்க நினைக்காமல் காவல்துறையே துணை நின்றது.
அதை மறந்து விட்டாயா?
ஈழத்தில் நம் உறவுகளைப் படுகொலைக்கு ஆளாக்கி விட்டு வெற்றிக் களிப்போடு
வந்த ராஜபக்ஷேவுக்கு மது விருந்து கொடுத்து மகிழ்ந்த சோனியாவுக்கும்
மன்மோகனுக்கும், மகான் வேஷம் போட்டு வருகிற இந்த மோடிக்கும் என்ன
வேறுபாடு?
இதையெல்லாம் பார்க்கிற போது, கேட்கிற போது மனித நேயம் மிக்கவர்களின்
இதயத்தில் எரிமலை வெடிக்க வேண்டாமா?
உனக்கு அப்படி வெடிக்கவில்லையா?
உன் இதயம் துடிக்கவில்லையா?
வேறு வழியில்லையே, என்கிறாயா தம்பி?

புலமை பித்தன்

No comments:

Post a Comment

ThirukKuRaL