தென்றல் (Thendral)

Tuesday, January 21, 2014

"தெய்வம் தொழாஅள்”

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை”

இந்நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள்.

இதைத்தான் நமது இதிகாசங்களும் புராணங்களும் சாத்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதி இருக்கிறானே தவிர ஆண்களோடு சரி சமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே!

ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்தரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முசுலிமை எடுத்துக்கொண்டால் பெண்களை, உலகத்தைக்கூடப் பார்க்கவிடமாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதைவிடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்துவிடுவானே! சாந்தி முகூர்த்தம் நடந்த மறுநாளே அந்தப் பெண் ஆஸ்பத்திரிக்குப் போய் விடுவாள் - இவ்வளவு காட்டு மிராண்டித்தனங்களும் பெண்கள்மீது சுமத்தப்பட்டு இருந்தனவே! பெண்களுக்காவது உணர்ச்சி வரவேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வரவேண்டாமா?

உலகிலே மற்ற நாட்டுக்காரன் எல்லாம் எப்படி எப்படி முன்னேறி வருகிறான்? வெள்ளைக் காரன் என்ன நம்மைவிடப் புத்தியுள்ளவனா? இயற்கையிலே நம்மைவிட அவன் அறிவில் குறைந்தவன்தானே - அவனோ குளிர்தேசத்துக்காரன்; நாமோ உஷ்ண தேசத்துக்காரன். பாம்புக்குக்கூட உஷ்ண தேசத்துப் பாம்புக்குத்தான் விஷம் அதிகம். பூவில்கூட உஷ்ணதேசத்துப் பூவுக்குத்தான் மணமும் மதிப்பும் அதிகம். அந்த இயற்கை அமைப்புப்படி, நாம் இயற்கையிலேயே அவர்களைவிட அறிவாளிகள்தான். இருந்தாலும் அவர்களின் முன்னேற்றம் எங்கே? நம் நிலை எங்கே? காரணம் - அவன் அறிவைப் பயன்படுத்தினான் - நாமோ பயன்படுத்தத் தவறி விட்டோம். அறிவைப் பயன்படுத்தினால் நாமும் அவனைவிட வேகமாக முன்னேற்ற மடையலாம்.

- பெரியார் .

No comments:

Post a Comment

ThirukKuRaL