தென்றல் (Thendral)

Thursday, January 23, 2014

இலங்கைத் தமிழனே; இது கேளாய்! - கலைஞர்

தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா? இலங்கைத் தமிழனே; இது கேளாய்! கலைஞர் கேள்வி-பதில்கள் (ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தி.மு.க.வின் பங்கு குறித்த விளக்கம் - பட்டியல் இதில் அடங்கியுள்ளது). கேள்வி: உலகத் தமிழர்களையெல்லாம் நீங்கள் ஏமாற்றி அவர்கள் காதில் பூ சுற்ற முயலுகிறீர்கள் என்கிறாரே ஒரு தலைவர்? கலைஞர்: நான் உலகத் தமிழர்களையெல்லாம் ஏமாற்றுகிறேனா இல்லையா என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். உலகத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார், தியாகம் செய்தவர்கள் யார், செய்பவர்கள் யார், வேடம் போடுபவர்கள் யார், தமிழர் பாதுகாப்பு என்ற பெயரால் ஆதாயம் தேடிக்கொள்ள முயலுபவர்கள் யார் என்பதையெல்லாம் உலகத் தமிழர்கள் நன்றாகவே உணருவார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடுபவர்கள் யார் என்பதைப்பற்றி நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியார் சென்ற வாரம் லண்டனிலிருந்து தொலைபேசிமூலம் என்னிடம் பேசும்போது நன்றாகவே அதனை எடுத்து விளக்கினார். எழுத்தாளர் சோலை இந்த வாரம் எழுதிய கட்டுரையில், ஆஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசியில் ஈழத்துச் சகோதரர், பத்திரிகையாளர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு, ஈழத்தின் அடிநாதத்தையே மறுப்பவர் ஜெயலலிதா, அதில் அவர் தொடர்ந்து தெளிவாக இருக்கிறார், ஆனால் எம் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிற அரசியல் தலைவர்கள் அந்த அம்மையாரோடு எப்படி அணி சேர்ந்து நிற்கிறார்கள், தயவுசெய்து எம் மக்களை முன்னிறுத்தி உங்கள் உள்ளூர் அரசியலை நடத்தவேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறியதாக எழுதியிருக்கிறார். எனவே, உலகத் தமிழர்கள் காதில் நான் பூ சுற்றுகிறேன் என்று சிலர் சொல்வதால், அவர்களின் ஆத்திரம் எந்த அளவிற்கு பெருகியுள்ளது என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளத்தான் அது பயன்படுகிறதேயல்லாமல் என்னை எதுவும் பாதிக்கவில்லை. தி.மு.க. தீர்மானம் ஏமாற்றம் அளிக்கிறதா? கேள்வி: தி.மு. கழகச் செயற்குழு தீர்மானம் ஏமாற்றம் அளிப்பதாக ஓரிருவர் சொல்கிறார்களே? கலைஞர்: தி.மு. கழகச் செயற்குழுவிலே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலேயிருந்து விலகிக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், தீர்மானம் திருப்தி தருவதாகச் சொல்லியிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான்கூட அதற்குத் தயாராக இருப்பவன்தான். இலங்கைத் தமிழர்களுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட ஈழத் தந்தை செல்வா அவர்களின் அன்பு மகன் சந்திரஹாசன் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஈழத் தமிழர் இன்னல், அதையொட்டித் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு இவையெல்லாம் தங்களைப் பாதிக்கும் என்பதை அறிவோம். ஆயினும் தாங்கள் ஆட்சியில் இருப்பதால்தான் இலங்கையில் சிங்களப் பேரினவாதம் ஓரளவுக்கேனும் அடக்கி வாசிக்கிறது. உலகத் தமிழர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளியிட முடிகின்றது. தங்கள் உடல்நலத்தைப் போலவே, தமிழகத்தில் தங்களுடைய ஆட்சியும் நலமும் பலமும் பெற்றுத் தொடர்வது இன்றியமையாததாகும். தடாகத்தில் நீர் இருந்தால்தான் தாமரை மலரும், மீன் வளம் பெருகும், பறவைகள் நாடி வரும். அதுபோல் தங்கள் ஆட்சி தொடர்வது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும், எங்குள்ள தமிழர்களுக்கும் இன்றியமையாததாகும். ஈழத் தமிழர் உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கு எதிரான போரை நிறுத்த தாங்கள் பதவி துறக்கவேண்டுமென்ற கோரிக்கை அறியாமையில் இருந்து எழுவதாகும். ஈழத் தமிழர்களே அதை விரும்பவில்லை. ஈட்டி இழந்த நிலையில் கேடயத்தையும் தூக்கி எறிய வேண்டுமென்று கேட்பது போன்றதாகும் அது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை எவர் மறந்தாலும், அதனை ஏற்க முடியாது என்று எழுதியிருந்த வாசகங்களும், மருத்துவ மனையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் உள்ளார்ந்த உணர்வோடு கருத்து தெரிவித்த தலைவர்கள், பதவி விலக வேண்டுமென்று கூறுபவர்கள் தாங்கள் அந்த இடத்தைப் பெறலாமா என்ற நப்பாசையோடு கூறுகிறார்கள், அவர்களின் வலைகளில் விழுந்துவிட வேண்டாமென்று எச்சரித்ததும் தான் அத்தகைய தீர்மானத்தை தி.மு.கழகச் செயற்குழு நிறைவேற்றாததற்குக் காரணம். அதனால் ஏமாற்றமடைந்தவர்களுக்கு என் அனுதாபம்! தி.மு.க. 50 ஆண்டுக்காலம் பின்னோக்கிப் போய்விட்டதா? கேள்வி: தி.மு. கழகம் அய்ம்பதாண்டு காலம் பின்னோக்கிச் சென்றுவிட்டது என்றும், 58ஆம் ஆண்டுக்கு முன் எடுத்த முடிவைத்தான் தற்போதும் எடுத்துள்ளது என்றும் ஒரு தலைவர் சொல்லுகிறாரே? கலைஞர்: அதில் இருந்தே தி.மு. கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இன்றோ நேற்றோதான் அக்கறை காட்டவில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா? பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவைத்தான் இப்போதும் எடுப்பதாகச் சொல்லுகிறார்கள். நாளைக்கொரு முடிவெடுக்காமல், 50 ஆண்டு காலத்திற்குப் பிறகும், தி.மு.கழகம் அதே முடிவில் இருக்கிறது என்பதில் என்ன தவறு உள்ளது? இவர்கள் மனதைக் குளிர வைப்பதற்காக தி.மு.கழகம் ஒரு முடிவை எடுக்க முடியுமா என்ன? தி.மு.க. - போர் நிறுத்தத்தை வலியுறுத்தவில்லையா? கேள்வி: தி.மு.க. தீர்மானத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த தவறிவிட்டது என்றும், அதனால் தமிழர்கள் வெட்கப்படுகிறார்கள் என்றும் ஒருவர் கூறியுள்ளது பற்றி? கலைஞர்: இதே கேள்வியை செய்தியாளரைவிட்டு, என்னிடம் கேட்கச் சொன்ன போதே, தீர்மானத்தில் போர் நிறுத்தம் குறித்து எழுதப்பட்ட வாசகங்களைப் படித்தே காட்டினேன். போர் நிறுத்தம் பற்றி குறிப்பிடவே இல்லை என்பவருக்குச் சொல்லுகிறேன்; தீர்மானம்பற்றி இந்து நாளிதழ் வெளியிட்ட செய்திக்கான தலைப்பு என்ன தெரியுமா? “D.M.K. Resolution calls for Permanent Ceasefire” என்பதுதான். ஆனால் பேட்டியில், போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தைகூட வலியுறுத்தப்படவில்லை என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள் என்றால், எந்த அளவிற்கு உண்மையை மூடி மறைக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா? தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா? கேள்வி: தி.மு.க. அரசுப் பொறுப்பிலிருந்து விலகவில்லை என்றதும் ஆத்திரப்பட்டு உங்கள் மீது சேற்றை வாரி இறைக்கிறார்களே, தி.மு.க. இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லையா? கலைஞர்: இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க. எந்தெந்த வகையில் போராடியிருக்கிறது, என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கிறது என்பதையும் ஆட்சியையே இழந்ததையும் இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும், ஏன் இந்தியத் தமிழர்களும் நன்கறிவார்கள். ஆனால் தமிழர்களுக்காக தாங்கள்தான் போராடப் புறப்பட்டிருக்கிறோம் என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். அவர்களும் தெரிந்து கொள்வதற்காக இதோ ஒரு பட்டியல்! 1956 முதல் தி.மு.க.வின் செயல்பாடுகள் 1956ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிதம்பரம் கழகப் பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் முன்மொழிந்த தீர்மானம், 1958ஆம் ஆண்டு இலங்கையில் உரிமைகள் பறிக்கப்படுகின்ற தமிழின மக்களுக்காக பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஒரு மாபெரும் பேரணியை தி.மு.க. நடத்தியதைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் இங்கே இடம் பெறுகிறது. * 24.8.1977 அன்று சென்னையிலே 5 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணி. கோரிக்கை வைக்காமலே அனைத்துக் கடைகளும் அன்று சென்னையில் மூடப்பட்டன. * 13-8-1981 அன்று பிரதமருக்கு இலங்கையிலே நடைபெறும் கொடுமை குறித்து தந்தி அனுப்பினேன். * 18.8.1981 அன்று பிரதமருக்கும், வெளி உறவுத் துறை அமைச்சருக்கும் தந்தி கொடுத்தேன். * 21.8.1981 அன்று சட்டசபையில் அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினேன். * 29.8.1981 அன்று தி.மு.க. கண்டனப் பேரணி - அரசு தடை. தடையை மீறி ஊர்வலம் - 250 பேர் கைது. * 2.9.1981 அன்று சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம். * 3.9.1981 முதல் சென்னையில் அன்றாடம் தடை மீறி ஊர்வலம் - இலங்கைத் தூதுவரது அலுவலகம் முன்பு மறியல். * 15.9.1981 அன்று தடையை மீறி ஊர்வலம் புறப்பட்ட நான் கைது. * 27.7.1983 சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி * 28.7.1983 தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி. * 2.8.1983 அனைத்துக் கட்சிகள் நடத்திய முழு அடைப்பு. * 4.8.1983 மத்திய அரசு அலுவலகங்களின் முன்னால் கறுப்புச் சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம். தமிழர் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், தொழிலகங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக்கொடி. * 5.8.1983 அன்று தமிழகம் முழுவதும் ரயில் நிறுத்த அறப் போராட்டம். கண்டனங்கள் - கூட்டங்கள் * 11, 12, 13, 14.8.1983 தமிழகம் முழுவதும் கண்டனக் கூட்டங்கள். * 10.8.1983 நானும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகல். * 1983 ஆகஸ்ட் முதல் - இரண்டு கோடி கையெழுத்துக்கள் பெற்று அய்.நா. மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. * 8.8.1983 டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாநோன்பு. * 85ஆம் ஆண்டு மார்ச் 29 முதல் ஒருமாத காலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் சென்று இலங்கைத் தமிழர் இன்னல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஒருமாத காலத்திற்கு விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. நாடெங்கும் மறியல்கள் * ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.கழகப் பொதுக்குழு முடிவின்படி 29.4.1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3 ஆம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6 ஆம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7 ஆம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8 ஆம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13 ஆம் தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15 ஆம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16 ஆம் தேதி செங்கை அண்ணா மாவட்டத்தில் 3000 பேரும், 17 ஆம் தேதி கோவை நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும்,18 ஆம் தேதி ராமநாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22 ஆம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைதாகினர். * 16.5.1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டு கைதானேன். * 23.8.1985 அன்று சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் பேரணி. பேரணி முடிவில் நாடு கடத்தும் காரியம் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்து, அதனையொட்டி நாடு கடத்தல் உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டது. * 30.8.1985 அன்று தமிழகத்தில் வேலை நிறுத்தப் போராட்டம். ஆயிரக்கணக்கானவர்கள் கைது. நாடெங்கும் பேரணிகள் * டெசோ அமைப்பின் சார்பில் அக்டோபர் 3 ஆம் தேதி கோவையிலும், 4 ஆம் தேதி திண்டுக்கல்லிலும், 5 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 6 ஆம் தேதி திருச்சியிலும், 7 ஆம் தேதி சேலத்திலும், 13 ஆம்தேதி வேலூரிலும் மிகப் பிரமாண்டமான பேரணிகளும், கூட்டங்களும் நடைபெற்றன. * 4.5.1986 அன்று மதுரையில் டெசோ அமைப்பின் சார்பில் அகில இந்தியத் தலைவர்களையெல்லாம் அழைத்து மாநாடு, பொதுக்கூட்டம். * 31.5.1986 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு கறுப்புச் சின்னம் அணிந்து கண்டன ஊர்வலங்கள் - பொதுக் கூட்டங்கள். * 3.6.1986 அன்று என்னுடைய பிறந்த நாள் விழா ரத்து செய்யப்பட்டு, போராளி இயக்கங்களுக்காக உண்டியல் மூலம் நிதி வசூலித்துக் கொடுத்த நிகழ்ச்சி. * 1987ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகள் கொடுக்கப்பட்டன. * 1987ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தி.மு.க. நடத்திய பேரணி * 16.10.1987 அன்று தளபதி கிட்டுவைக் காணச் சென்ற வைகோ கைது செய்யப்பட்டதற்காக கண்டன அறிக்கை. * இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக எட்டு மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். கிட்டுவைச் சந்திக்கச் சென்றபோது... * 17.10.1987 அன்று கிட்டுவைச் சந்திக்கச் சென்ற ஆர்க்காடு வீராசாமி, என்.வி.என். சோமு கைது. * 22.10.1987 அன்று சென்னையில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம். * 24.10.1987 அன்று ரெயில் நிறுத்தப் போராட்டம். தொடர்ந்து மறியல் போராட்டம் - பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது. * 6.11.1987 அன்று சென்னையில் ஈழத் தமிழர் உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப்புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்து கொண்ட மனிதச்சங்கிலி. தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி * 11.11.1987 தமிழகம் முழுவதும் மனிதச்சங்கிலி. * 15.3.1989 டெல்லியில் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களை இரண்டு முறை சந்தித்து ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தேன். 2.5.1989 அன்று பிரதமர் ராஜீவ் காந்தி முரசொலி மாறனுக்கு இலங்கைப் பிரச்சினை குறித்து நீண்ட கடிதம். 15.5.1989 அன்று முரசொலி மாறன் - பிரதமர் ராஜிவ் அவர்களுக்குப் பதில் கடிதம். * 15.6.1989 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜிவ் காந்தியுடன் இலங்கைப் பிரச்சினை குறித்து பேசினேன். * 15, 16.12.1989 ஆகிய நாட்களில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளான பாலசிங்கம், யோகி ஆகியோருடன் சந்திப்பு. 20.12.1989 அன்று பிரதமருடன் சந்திப்பு. * 4.1.1990 பல்வேறு போராளிக் குழுவினருடன் பிரதமர் கூறியதின் பேரில் சந்திப்பு. 1991 இல் கழக ஆட்சி கலைக்கப்பட்டதே! 1991ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக கழக ஆட்சி கலைக்கப்பட்டது. * 17.7.1995 அன்று ஒவ்வொரு நகரத்திலும் கழகத்தினர் கறுப்புச் சின்னம் அணிந்து உண்ணா நோன்பு. * 2.11.1995 அன்று சென்னையில் கறுப்புக் கொடி ஏந்திய பேரணி * 3.11.1995 அன்று மாவட்ட தலைநகரங்களில் கறுப்புக் கொடி பேரணி * தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் 25 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க நிதி. * 30.11.1995 முழு அடைப்பு. இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். ஆனால் இதனையெல்லாம் தமிழ் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நம்மீது களங்கம் கற்பிக்க நினைத்தால், அது நிச்சயமாக நிறைவேறாது. - நன்றி;-"விடுதலை" 6-2-2009

No comments:

Post a Comment

ThirukKuRaL