தென்றல் (Thendral)

Friday, January 31, 2014

இந்து மதவெறி இராஜ்ஜியம்

தமிழருவி மணியனும்,வைகோவும் இதனை இன்று மறந்ததேன்?
‘இந்து ராஜ்யம்’ இந்து மதவெறி பாசிஸ்டுகளின் ஒரு பகற்கனவு: இந்த நாட்டைப் பீடித்திருக்கும் அனைத்துப் பிணிகளுக்கும் சர்வரோக நிவாரணி என பா.ஜ.க கூறும் ‘இந்து ராஜ்ஜியத்தை’ அமைத்தல் - இந்துத்துவம் என்பதின் இலட்சணங்கள் என்ன? இதுவரை பா.ஜ.க அதை எழுத்து பூர்வமாகவோ, வெளிப்படையாகவோ அறிவித்தது இல்லை. அது சொன்னவை சில, சொல்லாமல் செய்ய விரும்புகின்றவை சில. சொல்லாமல் மறைத்து வைத்திருக்கும் அதன் உள்ளக்கிடக்கையை இந்துமதப் பண்டாரங்கள், பரதேசிகள், சாமியார்கள் (துறவிகள்) அமைப்பு - ஆகிய இந்திய சாதுக்கள் சந்நியாசிகள் பஞ்சாயத்து - ஒரு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் சுவாமி முக்தானந்தம், ஆசார்யவாமதேவ் ஆகிய இருவர், தற்போதுள்ள இந்திய அரசியல் சட்டம் எந்த அளவிற்கு இந்துக்களுக்கு விரோதமாக உள்ளது என விளக்கி 67 பக்கங்களைக் கொண்ட ஒரு ஆவணத்தை வெளியிட்டார்கள். இதற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அகில இந்திய சந்நியாசிகள் பஞ்சாயத்தின் தீர்மானத்திற்குப் பின்வரும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்து பண்பு நெறிகளின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்காக புதிய அரசியல் நிர்ணயசபையை நிறுவ வேண்டும் - யாரும் கேள்வி கேட்க முடியாத உயர்பதவியை பிராமணர்களுக்கு உறுதிசெய்யும் ஜாதி அமைப்பிற்கு அரசியல் சட்டத்தின் மூலம் அங்கீகாரம் அளிக்க வேண்டும். சிறுபான்மையினரைப் பாகுபடுத்திக் காட்டும் பிரிவுகளையும், சட்டங்களையும் நீக்குவோம். மேற்கூறப்பட்டிருப்பவை ஆர்.எஸ்.எஸ் தலைவரும் இந்தக் காவிச்சட்டை அமைப்புகளின் குருநாதருமான எம்.எஸ் கோல்வால்கர், 1939-இல் வெளியிட்ட ‘நாம் அல்லது நமது தேசியத் தன்மையின் விளக்கம்’ என்ற நூலில் இந்து ராஷ்டிரம் பற்றிய திட்டத்தைக் குறித்துக் கூறப்பட்டுள்ள கருத்தாக்கங்களின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. கோல்வால்கரின் கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சியோ வேறு எந்தக் காவிச்சட்டை அமைப்போ விமர்சித்தது இல்லை. இந்தக் காவிச்சட்டை அமைப்புகள் இன்றுவரை அவற்றை வேதவாக்காக ஏற்றுச் செயல்படுத்தி வருகின்றன. ‘நாம் அல்லது நமது தேசியத்தன்மையின் விளக்கம்’ என்ற நூலில் கோல்வால்க்கர் கூறுவதைப் பாருங்கள்: ”இந்துக்களின் பூமியில் இருப்பது இந்து தேசம். இருக்கவேண்டியதும் அதுவே. அதன் இன்றைய உறக்க நிலையிலிருந்து அதற்கு விழிப்பூட்டி வலிமை பெறச்செய்வதை இலட்சியமாகக் கொண்ட இயக்கங்கள் மட்டுமே உண்மையான தேசிய இயக்கங்கங்களாகும். மற்றவை அனைத்தும் தேசிய இலட்சியத்துக்கு எதிரான துரோகிகள், விரோதிகள், கொஞ்சம் கருணையோடு சொல்வதானால் முட்டாள்கள்.” மேலும் கோல்வால்கர் தான் கனவு காணும் இந்து இராஜ்ஜியத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். “பிறமதங்களைப் பின்பற்றும் இந்திய மக்கள் தங்களின் வேற்றுமையைக் கைவிட்டு, இந்து தேசத்தின் மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றை ஏற்று, அவர்கள் இந்து தேசிய இனத்தில் (National race) முற்றாக இணைந்து விட்டால் ஒழிய அவர்களுக்கு தேசவாழ்வில் இடங்கிடையாது. அவர்கள் தங்களின் இன, மத, பண்பாட்டு வேற்றுமைகளை வைத்துக் கொண்டிருக்கும் வரையில் அவர்கள் அன்னியர்களாக மட்டுமே இங்கே இருக்க முடியும்.” அவர் தொடர்ந்து பின்வருமாறு கூறுகிறார்; “இந்துஸ்தானத்தில் உள்ள அன்னிய இனத்தவர், ஒன்று இந்து பண்பாட்டையும், மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்தை மதிக்கவும் அதற்கு பயபக்தி செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்துக்கும், பண்பாட்டுக்கும் - அதாவது இந்து தேசத்துக்கு புகழ் பாடுவதைத் தவிர வேறு எந்த கருத்துக்கும் அவர்கள் இடம் தரக்கூடாது. இந்து இனத்துடன் கலந்துவிடும் பொருட்டுத் தங்களின் தனிவாழ்வை இழந்துவிட வேண்டும்; அல்லது இந்து தேசத்துக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக மட்டுமே அவர்கள் இந்த நாட்டில் தங்கியிருக்கலாம். எதற்கு உரிமை கொண்டாடக் கூடாது. குடியுரிமையைகூட அவர்கள் கோரக்கூடாது.” இதுதான் 1939-இல் கோல்வால்க்கர் பகற்கனவு கண்ட இந்து இராஜ்ஜியம் - இந்துத்துவம். இதுவே காவிச்சட்டைகளுக்கு வேதவாக்கு. இருப்பினும் பாரதீய ஜனதாக் கட்சி வெளிப்படையாகவும், ஒப்பனை செய்து கொள்ளாமலும் தனது உண்மையான பாசிச முகத்தைக் காட்டிக் கொள்வதில்லை. ஆயினும் பா.ஜ.க தனது கொள்கைகள், முழக்கங்கள், ராமன், ரொட்டி, இந்து இராஜ்ஜியம், இஸ்லாமியப் பகைமை, வர்ணாசிரம தர்மத்தைப் பேணுதல்; ஏகாதிபத்தியத்திற்கு தொண்டூழியம் செய்தல், தரகுப்பெருமுதலாளிகளுக்கும், பெரும் நிலப்பிரபுக்களுக்கும் கரசேவை செய்தல், ஆகிய அனைத்தையும் கோல்வால்கரின் பகற்கனவை நனவாக்கும் நோக்கத்துடன்தான் வகுத்துக்கொள்கிறது. நாடாளுமன்ற அமைப்புகளின் மூலமே இந்துமதவெறி பாசிச இராஜ்ஜியத்தை இராம இராஜியத்தை நிறுவும் பொருட்டு, காவிச்சட்டை அமைப்புகளுக்கிடையில் வேலைப் பிரிவினை செய்யப்படுகின்றன

No comments:

Post a Comment

ThirukKuRaL